ஆசிய கோப்பை ஹாக்கி; சூப்பர் 4 சுற்றில் ஜப்பானை பழிதீர்க்குமா இந்தியா?

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை ஹாக்கி; சூப்பர் 4 சுற்றில் ஜப்பானை பழிதீர்க்குமா இந்தியா?

ஜகர்த்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதுகின்றன. ஜப்பானிடம் ஏற்கனவே லீக் சுற்றில் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்தியா அதற்கு பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. 12 வீரர்கள் புதுமுக இளம் வீரர்களை கொண்ட இந்தியா கடைசி லீக்கில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் சுருட்டி வீசியது. இருப்பினும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்குவதில் இந்திய வீரர்கள் தடுமாறுகின்றனர். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். லீக் சுற்றில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற ஜப்பான் வீரர்கள் அதே உத்வேகத்துடன் களம் இறங்க உள்ளனர். இதனால் இந்திய வீரர்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. மற்றொரு போட்டியில் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை