15 மாநிலத்தில் 57 எம்பி பதவிக்கு தேர்தல்; காங்கிரசுக்கு 8 மாநிலத்தில் 11 இடங்கள் உறுதி? ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தினகரன்  தினகரன்
15 மாநிலத்தில் 57 எம்பி பதவிக்கு தேர்தல்; காங்கிரசுக்கு 8 மாநிலத்தில் 11 இடங்கள் உறுதி? ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் 15 மாநிலத்தில் 57 எம்பி பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரசுக்கு 8 மாநிலத்தில் 11 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் ெவளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது. இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 31ம் தேதி மாலை 3 மணி வரை உள்ள நிலையில், பாஜக - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. ஓரிரு நாளில் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் 15 மாநிலங்களில் நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் எட்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், 15க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் ‘சீட்’ கேட்டு தலைமையிடம் முறையிட்டு வருகின்றனர். யாரை தேர்வு செய்வது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அந்த பட்டியலில் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, பிரதீப் தம்தா, ஜி-23 தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ராஜஸ்தானில் 3 இடங்களிலும், சட்டீஸ்கரில் 2 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற முடியும். ஜார்கண்டில்  ஆளும் ஜேஎம்எம் கட்சியுடன் சேர்ந்து ஒரு இடத்தையும், கர்நாடகா, மத்திய பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மூலக்கதை