அதிகரித்து வரும் பணவீக்கம்; எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி

தினமலர்  தினமலர்
அதிகரித்து வரும் பணவீக்கம்; எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி


மும்பை : நீடித்த, சீரான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, வலுவான கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் அவசியம் என, ரிசர்வ் வங்கி, அதன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும், நாட்டின் மொத்தவிலை பணவீக்க அதிகரிப்பு, சில்லரை விலை பணவீக்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:மூலப்பொருட்கள் விலை, போக்குவரத்து செலவுகள், வினியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகள் ஆகியவற்றால் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து, நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.அரசாங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த, சமீபத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. மேலும் உருக்கு, பிளாஸ்டிக் தொழிலில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களின் இறக்குமதி வரியையும் தள்ளுபடி செய்தது.

அத்துடன், இரும்புத் தாது மற்றும் இரும்புத் துகள்கள் மீதான ஏற்றுமதியும் வரியையும் உயர்த்தி உள்ளது.கொரோனா கட்டுக்குள் வந்து, கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து மீட்சி பெற்று வந்த நிலையில், புவிசார் நிலைமைகளால், வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.புவிசார் அரசியல் பிரச்னைகளில் விரைவான தீர்வு, கொரோனா மேலும் பரவாமல் இருப்பது ஆகியவை, பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில், வளர்ச்சியின் தேவைகளை நாம் மனதில் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, நோயாளி இறந்துவிட்டது போல் அது இருந்துவிடக் கூடாது.

சக்திகாந்த தாஸ், கவர்னர், ரிசர்வ் வங்கி

மூலக்கதை