பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கம் தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசு

தினமலர்  தினமலர்
பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கம் தற்காலிகமாக கைவிட்டது மத்திய அரசு


புதுடில்லி: பெரும்பாலான ஏலதாரர்கள் ஏலத்தில் பங்கேற்க இயலாத நிலையை தெரிவித்ததை அடுத்து, ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை இப்போதைக்கு செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு, தன்னிடம் உள்ள 52.98 சதவீத பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகளை விற்க திட்டமிட்டிருந்தது.இதையடுத்து, ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் விருப்பத்தை தெரிவிக்கலாம் என, 2020 நவம்பரில் அறிவித்தது.

ஒரே ஒரு ஏலதாரர்
மூன்று ஏலதாரர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்த நிலையில், இருவர் ஏலம் குறித்த விஷயங்களில் தெளிவு இல்லை என கூறி பின்வாங்கி விட்டனர். இதையடுத்து, களத்தில் ஒரே ஒரு ஏலதாரர் மட்டுமே இருந்தார்.ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் புவிசார் அரசியல் நிலவரங்கள் காரணமாக, உலகளவில் தொழில்கள் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை கடுமையான பாதிப்புக்கு ஆளானது.இதையடுத்து, தகுதிவாய்ந்த விருப்பமுள்ள நிறுவனங்கள் பின்வாங்கியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, பங்கு விலக்கலுக்கான அமைச்சரவை குழு, பாரத் பெட்ரோலிய பங்குகளை விற்பது குறித்த தற்போதைய அனைத்து நடவடிக்கைகளையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

சூழலை பொறுத்து, மீண்டும் பங்கு விலக்கல் நடவடிக்கை துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயாக்கும் முயற்சி, பெரும்பாலான முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை.

தெளிவின்மை
இதற்கு, உலகளவில் கச்சா எண்ணெய் விலையின் போக்கு மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலை குறித்த தெளிவின்மை ஆகியவை காரணங்களாக அமைந்தன.துவக்கத்தில் வாங்க விருப்பம் தெரிவித்திருந்த ‘அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட்’ மற்றும் ‘ஐ ஸ்கொயர்டு கேப்பிட்டல் அட்வைசர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், தெளிவின்மை உள்ளிட்ட காரணங்களால் பின்வாங்கி விட்டன. இதையடுத்து, அனில் அகர்வாலின் தலைமையிலான ‘வேதாந்தா’ குழுமம் மட்டுமே களத்தில் இருந்தது.இந்நிலையில் இத்திட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது.

@block@@subboxhd@அரசின் அடுத்த திட்டம்@@subboxhd@@தற்போதைய புவிசார் சூழலில், பாரத் பெட்ரோலியம் பங்குகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமை சரியான பிறகு, மீண்டும் முயற்சியில் இறங்க அரசு திட்டமிட்டு உள்ளது. விற்பனை விதிமுறைகளை மாற்றி அமைப்பது, முதற்கட்டமாக 26 சதவீத பங்குகளை, நிர்வாக கட்டுபாட்டு வசதியுடன் விற்பது உள்ளிட்ட முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.@@block@@

மூலக்கதை