ரஜத் பத்திதார் அதிரடி சதம் ராயல் சேலஞ்சர்ஸ் அசத்தல் வெற்றி: குவாலிபயர்-2 போட்டிக்கு முன்னேறியது

தினகரன்  தினகரன்
ரஜத் பத்திதார் அதிரடி சதம் ராயல் சேலஞ்சர்ஸ் அசத்தல் வெற்றி: குவாலிபயர்2 போட்டிக்கு முன்னேறியது

கொல்கத்தா: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில், ரஜத் பத்திதாரின் அதிரடி சதத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, குவாலிபயர்-2 போட்டிக்கு முன்னேறியது.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மோஷின் கான் வீசிய முதல் ஓவரின் 5வது பந்திலேயே ஆர்சிபியின் டு பிளெஸ்ஸி கோல்டன் டக் அவுட்டானார். கோஹ்லி 25 ரன், கிளென் மேக்ஸ்வெல் 9 ரன், லோம்ரர் 14 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அதிரடி காட்டிய ரஜத் பத்திதார் 28 பந்தில் அரை சதம் அடித்தார். 5வது விக்கெட்டுக்கு இவருடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் அதிரடி காட்டினார்.  ரவி பிஷ்னோய் வீசிய 16வது ஓவரில் பத்திதார் விஸ்வரூபம் எடுக்க, ஆர்சிபி ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. அந்த ஓவரில் பத்திதார் 3 சிக்சர், 2 பவுண்டரி விளாசி மிரட்டினார்.  பத்திதார் 49 பந்தில் 11 பவுண்டரி மற்றும் அரை டஜன் சிக்சர்களுடன் சதத்தை பூர்த்தி செய்து அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்து அசத்தியது. பத்திதார் 112 ரன் (54 பந்து, 7 சிக்சர், 12 பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 37 ரன்னுடன் (23 பந்து, 1 சிக்சர், 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்ததாக 208 ரன் எடுத்தால் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடியது. தொடக்க வீரர் டிகாக் 6 ரன்னில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் கே.எல்.ராகுல் ஒன்மேன் ஆர்மியாக அசத்தினார். வோஹ்ரா 19 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹூடா, ராகுலுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி 96 ரன் சேர்த்த நிலையில் ஹூடா (45 ரன், 26 பந்து) டிசில்வா பந்தில் ஆட்டமிழக்க, லக்னோ தடுமாறியது.ஸ்டாய்னிஸ் (9 ரன்) ஹர்சல் படேல் வேகத்தில் வெளியேற, ராகுல் (79 ரன், 58 பந்து, 5 சிக்சர், 3 பவுண்டரி), க்ருணல் பாண்டியாவை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க வைத்து ஹேசல்வுட், மொத்த ஆட்டத்தையும் ஆர்சிபி பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் 26 ரன் தேவை என்ற நிலையில் 9 ரன் மட்டுமே எடுத்த லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களுடன் தோற்று, தொடரிலிருந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம், குவாலிபர் 2 போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி, அகமதாபாத்தில் நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது.

மூலக்கதை