மி(கி)ல்லர் அதிரடியில் பைனலில் குஜராத் : ஐபிஎல் கோப்பையை வெல்வது கனவு: கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பேட்டி

தினகரன்  தினகரன்
மி(கி)ல்லர் அதிரடியில் பைனலில் குஜராத் : ஐபிஎல் கோப்பையை வெல்வது கனவு: கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பேட்டி

கொல்கத்தா: 15வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றுநடந்த குவாலிபயர் -1 போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ்  மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 பந்தில், 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 89 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட்ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன் 47( 26 பந்து, 5 பவுண்டரி,3 சிக்சர்), படிக்கல் 28 ரன் அடித்தனர். குஜராத் பந்து வீச்சில், ஷமி,சாய் கிஷோர், ஹர்த்திக் பாண்டியா, யாஷ் தயாள் தலா ஒருவிக்கெட் வீழ்த்தினர்.பின்னர் 189 ரன் இலக்கை துரத்திய குஜராத் அணியில் விருத்திமான் சகா போல்ட் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் டக்அவுட்ஆனார். 2வது விக்கெட்டிற்கு சுப்மான்கில்- மேத்யூ வேட் 72ரன் சேர்த்த நிலையில் கில் 35 ரன்னில் (21பந்து,5பவுண்டரி,ஒருசிக்சர்) ரன்அவுட் ஆனார். வேட்35 ரன்னில் கேட்ச் ஆக பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்த்திக் பாண்டியா-டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி வெற்றிபாதைக்கு அழைத்துச்சென்றனர். பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது.  மில்லர் முதல் 3 பந்துகளையும் சிக்சர் விளாசினார். 19.3ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 191ரன் எடுத்த குஜராத் 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. 35 பந்தில் அரைசதம் விளாசிய மில்லர் 38 பந்தில் 3பவுண்டரி, 5 சிக்சருடன் 68, ஹர்த்திக்பாண்டியா 27பந்தில் 40ரன்னும் (5பவுண்டரி) எடுத்து களத்தில் இருந்தனர். மில்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். தோல்வி அடைந்த போதிலும் ராஜஸ்தானுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. இன்று எலிமினேட்டர் போட்டியில் (லக்னோ-ஆர்சிபி) வெல்லும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் மோதும். வெற்றிக்கு பின் குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கூறியதாவது:கடந்த 2 வருடங்கள் கடினமான காலமாக (காயம்) இருந்தது. என் குடும்பம், மகன்,  மனைவி மற்றும்  சகோதரனும் பக்கபலமாக இருந்தனர். அதுவே என்னையும் சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியது.  நான் வீட்டிற்குச் சென்று குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன். டைட்டன்ஸ்க்கான முதல் இறுதிப் போட்டி பற்றி ​​எதுவும் சிந்தனை இல்லை. நடுநிலையாக இருக்க முயற்சிக்கிறேன். எங்கள் 23 வீரர்களும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆடும் லெவனுக்கு வெளியே உள்ள வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் உண்மையிலேயே பார்க்கிறேன். ரஷீத்  தொடர் முழுவதும் அருமையாக செயல்பட்டார், ஆனால் நான் மில்லரை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். இதற்கு முன் சேசிங்கில் மும்பையிடம் அடைந்ததோல்வியால் ஏமாற்றம் அடைந்தோம். இன்று இருவரும் வெற்றியுடன் முடிக்க விரும்பினோம்.ஒரு கிரிக்கெட் வீரராக, நான் எப்போதுமே பேட்டிங் செய்ய விரும்புகிறேன். எங்களிடம் நல்ல பேட்டிங் ஆர்டர் உள்ளது, ஐபிஎல் கோப்பையை வெல்வது கனவு. நாங்கள் தொடரை தொடங்கியபோது, ​​வெளிப்படையாக நான் வெற்றி பெற விரும்பினேன். நான் 4முறை ஐபிஎல் பைனலில் ஆடி வென்றுள்ளேன். தற்போதும் பட்டம் வெல்ல விரும்புகிறோம், என்றார். ஆட்டநாயகன் டேவிட் மில்லர் கூறுகையில், எனக்கு ஒரு பாத்திரம்(பினிஷிங்ரோல்) வழங்கப்பட்டது. நான்அதை அனுபவித்து வருகிறேன், பல வருடங்களாக விளையாடி வருகிறேன். எனது ஆட்டத்தை நன்றாக புரிந்துகொண்டேன். எங்களுக்கு சில நாட்கள் விடுமுறை. மீண்டும் ஒரு பயணம் உள்ளது, இந்த வெற்றியை நாங்கள் கொஞ்சம் மது பானங்கள் அருந்தி கொண்டாடுவோம் என்றார்.டாஸ் இழந்ததால் தோல்வி தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், வெற்றிபெற போதுமான ஸ்கோர்தான். ஆனால், பிட்ச் முதலில் கடினமாக இருந்த நிலையில், குஜராத் பேட்டிங் செய்தபோது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியதாக எண்ணுகிறேன். எங்கள் அணியில் இருக்கும் 5 பேரும் ஸ்டார் பவுலர்கள்.  இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இருப்பினும், இன்று 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம், டாஸும் வெற்றி, தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அடுத்த போட்டியில் வெற்றிபெற கடுமையாக உழைப்போம் எனத் தெரிவித்தார்.

மூலக்கதை