நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு

தினகரன்  தினகரன்
நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு

மும்பை: மும்பையில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிய நடிகை வைஷ்ணவி பாட்டீல் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க லால் மஹாலில், சத்ரபதி சிவாஜி தொடர்பான நாட்டுப்புற நடன நிகழ்ச்சி ஒன்று கடந்த கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடத்தப்பட்டது. நடிகையும், மாடல் அழகியுமான வைஷ்ணவி பாட்டீல் உள்ளிட்டோர் நடனமாடினர். மராத்தி திரைப்படம் ஒன்றிற்காக, இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால், நடனத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, மராட்டிய அமைப்பு ஒன்று நடிகை வைஷ்ணவி பாட்டீல் மற்றும் சமூக வலைதளத்தை நிர்வகிக்கும் நபர்களுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான அந்த வீடியோ பதிவில், சத்ரபதி சிவாஜி மற்றும் ராஜ்மாதா ஆகியோரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோவை வெளியிட்டவர், அதற்காக மன்னிப்பு கோரியும் நடிகைக்கு எதிராக சிலர் தொடர்ந்து குரல்களை எழுப்பி வருகின்றனர். அதையடுத்து லால் மஹாலின் காவலாளியான ராகேஷ் வினோத் சோனாவானே என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், வைஷ்ணவி பாட்டீல் மற்றும் மூன்று பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்  பிரிவு 295, பிரிவு 186 ஆகியவற்றின் கீழ்  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை