45 நாட்களுக்கு பிறகு விலையில் மாற்றம் பெட்ரோல் ரூ.8.22 டீசல் ரூ.6.70 குறைந்தது: சென்னையில் ரூ.102.63, ரூ.94.24க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
45 நாட்களுக்கு பிறகு விலையில் மாற்றம் பெட்ரோல் ரூ.8.22 டீசல் ரூ.6.70 குறைந்தது: சென்னையில் ரூ.102.63, ரூ.94.24க்கு விற்பனை

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் 45 நாட்களுக்கு பிறகு நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.22, டீசல் ரூ.6.70 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. உ.பி, பஞ்சாப், உத்தரகண்ட் உள்பட 5 மாநில தேர்தல் முடிந்ததும், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு உயர்த்த தொடங்கியது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.112ம், டீசல் லிட்டருக்கு ரூ.100ஐயும் தாண்டி விற்பனையானது. இந்த விலை உயர்வுக்கு ரஷ்யா-உக்ரைன் போர்தான் காரணம் என கூறப்பட்டது.இந்த விலை உயர்வை கண்டித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக, ஏப்ரல் 6ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 45 நாட்களாகபெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஒரே விலையில் வைத்திருந்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6ம் குறைத்தது. இதையடுத்து, நேற்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, பெட்ரோலுக்கு ரூ.8.22, டீசலுக்கு ரூ.6.70 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110.85ல் இருந்து ரூ.102.63ஆக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் ரூ.100.94ல் இருந்து ரூ.94.24ஆக குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பெட்ரோல் ரூ.111.61ல் இருந்து ரூ.103.39 ஆகவும், டீசல் ரூ.101.71ல் இருந்து ரூ.95.01 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க நடவடிக்கை வேண்டும் என லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.* ஒன்றிய பாஜ அரசு 12 தவணைகளில் கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.26.77ம், டீசலுக்கு ரூ.31.47ம் உயர்த்தியது.* இதில் இதுவரை பெட்ரோலுக்கு ரூ.14.50 மற்றும் டீசலுக்கு ரூ.21 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டில் ரூ.8 லட்சம் கோடி வருவாய்கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஒன்றிய அரசு  கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்தது. இதன்பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘‘கடந்த 3 நிதியாண்டுகளில் அதாவது, 2018-19ல் ரூ. 2,10,282 கோடி, 2019-20 ரூ.2,19,750 கோடி, 2020-21ல் ரூ.3,71,908 கோடியை கலால் வரி மூலம் ஒன்றிய அரசு ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். அதாவது, 3 நிதியாண்டுகளில் கலால் வரி உயர்வின் மூலம் ரூ.8,01,940 கோடி வருவாயை ஒன்றிய அரசு ஈட்டியுள்ளது.

மூலக்கதை