குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

தினகரன்  தினகரன்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஜப்பானில் நாளை தொடங்கும் 2 நாள் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி நேற்று புறப்பட்டு சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ அமைப்பை உருவாக்கி உள்ளன. கடந்தாண்டு கொரோனா காரணமாக, இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொலி மூலமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு, புதிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள 21ம் நுற்றாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.  இந்நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டார். இதை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:குவாட் 2வது உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்க இருக்கிறேன். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவருடன் கலந்து ஆலோசிக்க உள்ளேன். மேலும், பிராந்திய ஒத்துழைப்பு, மேம்பாடு மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் பைடனுடன் விவாதிக்க இருக்கிறேன். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று ஜப்பான் செல்கிறேன். அங்கு இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திகள், பொருளாதாரஒத்துழைப்பு மற்றும் உலக அளவிலான கூட்டாண்மையை மேம்படுத்துவது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். ஜப்பானில் நடைபெறும் 2-வது குவாட் உச்சி மாநாடு, உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்டுள்ள குழு முயற்சிகளின் வளர்ச்சியை மறுபரிசீலனை செய்வதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய ஆலோசிக்கவும் வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன்.குவாட் உச்சி மாநாட்டில் முதல்முறையாக கலந்து கொள்ளும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானிசுடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான விரிவான பன்முக கூட்டுறவு ஒத்துழைப்பு பரஸ்பர பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளேன். எனது பயணத்தின்போது ஜப்பானில் வசிக்கும் 40 ஆயிரம் இந்தியர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். அவர்கள்தான் ஜப்பான் உடனான இந்தியாவின் உறவுக்கு பாலமாக இருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாட மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.* ஜப்பானில் 40 மணி நேரம் தங்கும் பிரதமர்  மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா,  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை  நடத்துகிறார். * இது தவிர, மேலும் 23 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். *  தனது பயணத்தின்போது ஒருநாள் இரவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும், 2 நாள் இரவை  விமானத்திலும் மோடி செலவிடுகிறார்.

மூலக்கதை