காவல் நிலையத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வீடுகள் தரைமட்டம்: மபி, டெல்லி பாணியில் அசாமும் அதிரடி

தினகரன்  தினகரன்
காவல் நிலையத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வீடுகள் தரைமட்டம்: மபி, டெல்லி பாணியில் அசாமும் அதிரடி

கவுகாத்தி: அசாமில் போலீஸ் நிலையம் மீது  தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் மத்திய பிரதேசம், டெல்லியில் இரு பிரிவினர் இடையே  மோதல் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்க முதல்வர் மபி முதல்வர் உத்தரவிட்டார். டெல்லியில் கலவரத்தில்  ஈடுபட்டவர்களின் வீடுகள், கடைகளை மாநகராட்சி இடித்து தள்ளியது. இந்நிலையில், அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த  ஷபிக்குல் இஸ்லாம் (39) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை  படத்ராவாவில் இருந்து சிவ்சாகருக்கு சென்றபோது போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு  அழைத்து செல்லப்பட்டார்.நேற்று முன்தினம் காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின் அவர் இறந்தார். இதையடுத்து, ஒரு கும்பல் காவல் நிலையத்திற்கு தீ வைத்தது. இதில், 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞர்  பலியானார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல் நிலைய சூறையாடலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 3 பேரின் வீடுகளை மாநில அரசு நேற்று புல்டோசர் மூலமாக இடித்து தள்ளியது. இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘ ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றன. காவல்துறை டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா கூறுகையில், ‘‘சமூக விரோதிகள் சிலர் காவல் நிலையத்துக்கு தீ வைத்துள்ளனர். போலீஸ் நிலையத்தை எரித்து விட்டு யாரும் தப்பி விட அனுமதிக்க மாட்டோம். வன்முறையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்வாரா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்,’’ என்றார்.

மூலக்கதை