தெரு நாய்கள் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

தினகரன்  தினகரன்
தெரு நாய்கள் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

ஹோஷியார்பூர்: பஞ்சாப் மாநிலம், பைரம்பூர் அருகே கியாலா புலந்தா கிராமத்தில் உள்ள ஒரு வயலில் 6 வயது சிறுவன், ரித்திக் ரோஷன் நேற்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது, சில தெருநாய்கள் அவனை துரத்தின. இதனால், பயந்துபோன ரித்திக் ரோஷன், நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது அங்கு திறந்தவெளியில் இருந்த 100 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு, மருத்துவ குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள், சிறுவனை மீட்க முயன்றனர். 100 அடி ஆழத்தில் சிறுவன் இருந்ததால், குழாய்கள் மூலம் அவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும், சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க ஆழ்துளை கிணற்றின் உள்ளே கேமராவும் வைக்கப்பட்டது. இதையடுத்து, ராட்சத இயந்திரம் மூலம் மண்ணை தோண்டி சிறுவனை மீட்கும் பணி நடந்தது. ஆனால், அந்த இயந்திரம் மூலம் 15 அடி வரை மட்டுமே உள்ளே இறக்க முடிந்தது. 9 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சிறுவன் மயங்கி நிலையில் மீட்கப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மூலக்கதை