சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் உயிரிழப்பு: மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
சார்தாம் யாத்திரையில் 57 பக்தர்கள் உயிரிழப்பு: மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு

டேராடூன்: சார்தாம் யாத்திரையில் இதுவரை 57 பேர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, பயண பாதைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரியை உள்ளடக்கிய புனித யாத்திரை ‘சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இதில் கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை கடந்த 3ம் தேதி, கேதார்நாத் கோயில் நடை 8ம் தேதியும் திறக்கப்பட்டன. அதிகளவு பக்தர்கள் பதிவு செய்வதால் அங்கு செல்வதற்கான தினசரி எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்ரிநாத்துக்கு தினமும் 16,000, கேதார்நாத்துக்கு 13,000, கங்கோத்ரிக்கு 8,000 மற்றும் யமுனோத்ரிக்கு 5,000 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடுங்குளிர், பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, ஆய்வுகள், பரிசோதனை, எடுத்து வர வேண்டிய உடைகள், மருந்துகள் உள்ளிட்ட அறிவுரைகளை அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், சார்தாம் யாத்திரையில் இதுவரை 57 பேர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாக இந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் செல்லும் பாதைகளில் அதிகளவில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை சார்தாம் யாத்திரையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக பத்ரிநாத்-கேதர்நாத் ஆலய கமிட்டி தெரிவித்துள்ளது.* ரேடியோ அலைவரிசை அடையாள அட்டைஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் திரிகூட மலையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ரேடியோ அலைவரிசை கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், பனிமலையில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். பயணிகள் வழி தவறும் பட்சத்தில் அல்லது உடல் நல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னை ஏற்படும் நிலையில் உதவுவதற்காக இந்த அடையாள அட்டை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தன்று இந்த கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 12 பேரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த அடையாள அட்டை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை