கடைசி போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி; கேப்டன் ரோஹித்சர்மா பேட்டி

தினகரன்  தினகரன்
கடைசி போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி; கேப்டன் ரோஹித்சர்மா பேட்டி

மும்பை:ஐபிஎல் 2022 கிரிக்கெட்டில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி, டெல்லி அணியை வீழ்த்தியதுடன் அதன் பிளே ஆப் கனவையும் தகர்த்தது. ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 0 (1) டக் அவுட் ஆனார். அடுத்து வந்த டேவிட் வார்னர் 5 ரன்னில் (6), அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து பிரித்விஷா 24 ரன் (23), சர்பராஸ்கான் 10 ரன் (7) விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து கேப்டன் ரிஷப் பன்ட், பாவெல் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை கவுரமான நிலைக்கு உயர்த்தினர். இறுதியில் ரிஷப் 39 ரன்(33), பாவெல் 43 ரன் (34) எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 10 பந்துகளில் 19 ரன்கள் அடித்தார். இதனால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணியில் ரோஹித்ஷர்மா 13 பந்துகளை சந்தித்து 2 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். ஆனால் இஷான் கிஷன் 48 (35), டிவோல்ட் பிரெவிஸ் 37 (22) ஆகியோர் அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தனர். தொடர்ந்து திலக் வர்மா 20 (15), டிம் டேவிட் 34 (10) ஆகியோரின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 160 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராமன்தீப் சிங் 13 (6) கடைசி வரை களத்தில் இருந்தார். 3 விக்கெட் எடுத்து மும்பையின் வெற்றிக்கு உதவிய பும்ரா ஆட்டநாயகன் விருதுபெற்றார்.இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இதனால், ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் -0.253 என்ற குறைவான நெட் ரன் ரேட்டுடன் 4வது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. வெற்றிக்கு பின் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘‘வெற்றி பெறத்தானே இங்கு வந்திருக்கிறோம். கடைசி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இந்த தொடரில் நாங்கள் செய்த தவறுகளை அடுத்த தொடரில் சரி செய்து விடுவோம். 8 போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் மீண்டு வருவது கடினம்தான். ஆனால் இத்தொடரின் பின்பாதி ஆட்டங்களில் ஓரளவு நன்றாக ஆடியிருக்கிறோம். இப்போட்டியில் 160 ரன்கள் இலக்கு என்றவுடன் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். ஏனென்றால் ஆடுகளம் மந்தமாக இருந்தது. ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என எண்ணினேன். இலக்கை துரத்தி ஆடியபோது துவக்கம் நன்றாக இல்லை. ஆனால் இஷான் கிஷனும், டிவால்ட் பிரெவிசும் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். வெற்றிக்கு தேவை கூட்டு முயற்சி. பேட்டர்கள் நன்றாக ஆடி ரன்களை எடுத்தால், அப்போட்டியில் பவுலர்கள் சரியாக பந்து வீசுவதில்லை. பவுலர்கள் திறமையாக ஆடினால், பேட்டர்கள் ரன்களை எடுப்பதில்லை. இந்த தொடரில் தாமதமாகத்தான் வெற்றிக்கணக்கை துவக்கினோம். கடைசி போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி’’ என்றார். ஆட்ட நாயகனாக தேர்வான ஜஸ்பிரித் பும்ரா கூறுகையில், ‘‘சிறப்பாக ஒன்றுமில்லை. மிகவும் சந்தோஷமாக, ரசித்து ஆடினேன். வழக்கமாக இங்கு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இன்று ஆடுகளம் மந்தமாக இருந்தது. பந்து அதிகம் ஸ்விங் ஆகவில்லை. ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு திட்டமிட்டு பந்து வீசினோம். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு (பவுலர்களுக்கு) என்னால் முடிந்த அளவு உதவி செய்திருக்கிறேன். அதனால் டிரெஸ்சிங் ரூமில் நல்ல சகஜமான நிலை இருந்தது. ஆண்டுதோறும் நமது விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அது நிற்கக் கூடாது. அடுத்த ஆண்டு, வலிமையுடன் திரும்பி வருவோம். இத்தொடரில் எனது பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தது. கையை விட்டு பந்து சென்றபின், நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த அளவு சிறப்பாக ஆடுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை