ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 150 ரன்கள் குவிப்பு: மொயீன் அலி அதிரடி

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 150 ரன்கள் குவிப்பு: மொயீன் அலி அதிரடி

மும்பை: மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெறும் 68-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றிக்காக சென்னை அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் கான்வே களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கெய்க்வாட் 2 ரன்கள் எடுத்து போல்ட் ஓவரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி அதிரடி காட்ட தொடங்கினார். குறிப்பாக மொயீன் அலி ஒரே ஓவரில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரிகள் விளாசினார்.தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மொயீன் அலி 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணிக்காக குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எடுத்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு பிறகு உள்ளார். கான்வே, ஜெகதீசன் மற்றும் ராயுடு ஆகியோர் பெரிதாக சோபிக்காத நிலையில் அடுத்து வந்த கேப்டன் தோனி 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சஹால் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து ஆடிய மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் அவுட் ஆனார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது. 151 ரன்களை இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

மூலக்கதை