பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

தினகரன்  தினகரன்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதுகின்றனர். இதனால் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  கொரோனா பரவல் தடுப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தொற்று எண்ணிக்கை குறைந்தபோது ஆன்லைனில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர செயல்படாமல் விடுமுறை இருந்தபோதும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து பல இடங்களில் சகஜ நிலை திரும்பி உள்ளதால் திருப்பதி கோயிலிலும் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை விடியவிடிய கடுங்குளிரில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 12 மணிநேரம் காத்திருக்கின்றனர். ₹300 கட்டண தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணிநேரம் வரை காத்திருந்து தரிசித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதாமன் வழங்கப்பட்டது. அதேபோல் அன்னபிரசாத கூடத்திலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.ரூ.4.05 கோடி காணிக்கைதிருப்பதி கோயிலில் நேற்று ஒரேநாளில் 67,625 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 34,584 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில் ₹4.05 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

மூலக்கதை