இன்றைய கிரைம் ரவுண்ட அப்: மோசடி பெண் மத போதகர் மீது புகார்

தினமலர்  தினமலர்
இன்றைய கிரைம் ரவுண்ட அப்: மோசடி பெண் மத போதகர் மீது புகார்

தமிழக நிகழ்வுகள்:வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி : கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது போலீசில் புகார்

சென்னை,:வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிய, கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காட்ப்ரே வாஷிங்டன் நோபில்; பேராயர். இவர், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அளித்த புகார்:
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியா சிஸ்டர் என்பவர், என் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். 'நீங்களும் பேராயர், நானும் மத போதகர். உங்கள் மூத்த மகனுக்கு, கிரீஸ் நாட்டில், மெடிட்டேரியன் ஷிப்பிங் கம்பெனியில் வேலை வாங்கி தருகிறேன்' என, கூறினார்.
அங்கு, மே 2க்குள் வேலையில் சேர வேண்டும் எனக் கூறி, வங்கி கணக்கு வாயிலாகவும், பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்தும், 8.50 லட்சம் ரூபாய் வாங்கினார். 'விசா' வந்தபாடில்லை.
இதனால், இவர் தெரிவித்த கம்பெனியின் இணையதள பக்கத்தை பார்த்தேன்.
அதில்,'வேலை வாங்கித் தருவதாக, எங்கள் கம்பெனியின் பெயரைச் சொல்லி யாரும் பணம் கேட்டால் தர வேண்டாம்' என, எச்சரிக்கப்பட்டு இருந்தது.
பின், அந்த கம்பெனி நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, மரியா சிஸ்டர் எங்களிடம் வழங்கிய பணியாணை போலி என தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, 'மரியா சிஸ்டர் என்பவரின் பெயர் மரியா செல்வம், 42. இவர், இலங்கையைச் சேர்ந்தவர்.
மத போதகராக செயல்பட்டு, 'சர்ச்'சுகளுக்கு வருவோருக்கு, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்வதையே தொழிலாக செய்து வந்தார்' என்பது தெரிய வந்தது.
இவர் மீது மோசடி உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


மூணாறில் சுற்றுலா கார் கவிழ்ந்து இருவர் பலி

மூணாறு, கொச்சி---தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் சுற்றுலா கார் கவிழ்ந்து ஆந்திரா மாநிலம் அன்னாமையா மாவட்டம் ராயசோட்டியைச் சேர்ந்த நவுஷாத் 32, அவரது எட்டு மாத பெண் குழந்தை நைஷா இறந்தனர். ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.

ராயசோட்டியைச் சேர்ந்த 25 பேர் மூன்று கார்களில் மூணாறுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டனர். அதில் ஒரு கார் நேற்று காலை 7:00 மணிக்கு கேப் ரோட்டில் 500 அடி பள்ளத்தில் உருண்டு பைசன்வாலி ரோட்டில் விழுந்தது. காரில் பயணித்த நவுஷாத், நைஷா இறந்தனர். நவுஷாத்தின் மனைவி ஆயிஷா 27, மகள் ஆலிஷா 5, நசுரூதீன் 44, மனைவி கவுஹார் 27, மகன் கெளஷி 5, மற்றும் அல்தாப் 33, முஸ்தபா 14, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

கவுஹார், முஸ்தபா ஆகியோர் மூணாறு டாடா மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் கோலஞ்சேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
மூணாறு,தேவிகுளம் போலீசார், தீயணைப்பு துறையினர், ஏலத்தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காரணம்: கேப் ரோட்டில் எப்பொழுதும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படும்.நேற்று காலை மழை பெய்ததால் மேகமூட்டம் ரோடு தெரியாத அளவில் கடுமையாக இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


****************************

இந்திய நிகழ்வுகள்:காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட மாணவியர்

பெங்களூரு:பெங்களூரில், காதலனுக்காக பள்ளி மாணவியர் இருவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்கி சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரில் தனியார் பள்ளியில் படிக்கும் இரு மாணவியர் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் நடந்து சென்ற இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றனர்.
திடீரென ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் விலக்கி விட முயன்றும் முடியவில்லை. சிலர் இதை 'வீடியோ' எடுத்த நிலையில், இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஒரே நபரை இரு மாணவியரும் காதலிப்பதால் மோதல் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய
வந்துள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதி மாலிக்குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி :'பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக், குற்றவாளி' என, டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதிகள் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபிஸ் சயீது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாஹுதீன் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், “இந்த வழக்கில், பிரிவினைவாதி யாசின் மாலிக், குற்றவாளி,” என, சிறப்பு நீதிபதி பிரவீன் சிங் நேற்று உத்தரவிட்டார்.
மாலிக்கின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்யக்கோரி என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதன் அடிப்படையில், அவருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளார்.யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரங்கள், 25ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்., அரசு புலம்பல்

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள, இந்தியாவின் துணை துாதரை அழைத்து, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் தலைவர்களின் குரல்வளைகளை
ஒடுக்க, இந்திய அரசு முயற்சித்து வருவதாக, பாக்., வெளியுறவுத் துறை புலம்பி உள்ளது.

****************

உலக நிகழ்வுகள்கண்டதும் சுட உத்தரவிடவில்லை இலங்கை புதிய பிரதமர் மறுப்பு

கொழும்பு,:
''கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது,பொதுச் சொத்துக்களை நாசப்படுத்துவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,'' என, இலங்கையின் புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, அவர் அலுவலகம் முன் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர். இதனால் கொதித்தெழுந்த மக்கள் வன்முறையில் இறங்கினர். ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகளை தீ வைத்து எரித்தனர்; சொத்துக்களை சூறையாடினர். இதையடுத்து, பொதுச் சொத்துக்களை நாசம் செய்வோரை கண்டதும் சுட இலங்கை ராணுவம் உத்தரவிட்டது. இந்த வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து, இலங்கை பார்லி.,யில் புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது:
வன்முறையில் இறங்கிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி, ராணுவத்திற்கு எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. எனினும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது தேவைப்பட்டால், குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என கூறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவ அமைச்சகமும், பிரதமரும் மாறுபட்ட தகவலை தந்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, ஏற்கனவே இரண்டு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் சில எம்.பி.,க்களிடம் விசாரணை நடத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுதும் பல்கலை மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி அதிரடி
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி நேற்று சில அதிரடி முடிவுகளை அறிவித்தது. இதன்படி, இலங்கை மக்கள், 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவஞ்சலி

கடந்த 2009 மே 18ல் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன், 13வது ஆண்டு நினைவு தினம் இலங்கையில் அனுசரிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பூக்களைத் துாவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நாளை இலங்கை அரசு ராணுவத்தின் வெற்றித் திருநாளாக கொண்டாடும். இந்தாண்டு முதன் முறையாக கொழும்புவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், ஏராளமான சிங்களர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
அதிபர் அதிகாரம் குறைப்பு?

இலங்கையில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரத்தை குறைக்கும், அரசியல் சாசன 21வது சட்ட திருத்த மசோதாவை, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் பார்லி.,யில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக நிகழ்வுகள்:வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி : கிறிஸ்தவ பெண் மத போதகர் மீது போலீசில் புகார்சென்னை,:வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிய,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை