சிந்தனை அமர்வு கூட்டத்தை தொடர்ந்து ராகுல் காந்தி லண்டன் பயணம்; 23ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலையில் உரை

தினகரன்  தினகரன்
சிந்தனை அமர்வு கூட்டத்தை தொடர்ந்து ராகுல் காந்தி லண்டன் பயணம்; 23ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலையில் உரை

புதுடெல்லி: உதய்பூர் சிந்தனை அமர்வு கூட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேம்பிரிட்ஜில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்  காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை  அமர்வு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கட்சியின் அமைப்பு, எதிர்கால  திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி திடீரென நேற்று லண்டன் சென்றார்.  இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,  ‘வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் உரையாடுவதற்காக ராகுல்காந்தி லண்டன் சென்றுள்ளார். வரும் 23ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘75வது  ஆண்டில் இந்தியா - சவால்கள் - நவீன இந்தியா - முன்னோக்கி செல்லும் பாதை’  என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையை நிகழ்த்துவார்’ என்றார்.  ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித் மற்றும்  பிரியங்க் கார்கே ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர். மற்றொரு நிகழ்ச்சியில்  பங்கேற்கும் ராகுல் காந்தியின் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களான  ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி  தலைவர் கே.டி.ராமராவ், சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள்  பங்கேற்கின்றனர்.

மூலக்கதை