ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுடன் இன்று மோதல் ஆறுதல் வெற்றிபெறுமா சென்னை?

தினகரன்  தினகரன்
ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுடன் இன்று மோதல் ஆறுதல் வெற்றிபெறுமா சென்னை?

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 68வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி இதுவரை ஆடிய 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. ரன்-ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இருப்பினும் இன்று வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறி அணியின் நிலையை மேலும் வலுப்படுத்தி கொள்ள ராஜஸ்தான் அணி வீரர்கள் திட்டமிட்டு ஆடுவர். இந்த அணியில் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் (627 ரன்கள்) கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதோடு மனைவிக்கு குழந்தை பிறந்ததை முன்னிட்டு தனது நாட்டுக்கு சென்ற அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும். பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (24 விக்கெட்), ஆர்.அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் பவுல்ட், குல்தீப் சென் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார்கள். அதே நேரத்தில் அதிக முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி இந்த தொடர் வரை கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது கிடையாது. இதனால் புள்ளிப்பட்டியலில் மேலும் கீழே இறங்கிவிடக்கூடாது என்ற மனநிலையுடன் சென்னையின் ஆட்டம் இருக்கும். அதோடு முந்தைய 2 போட்டிகளில் மும்பை, குஜராத் அணிகளிடம் தோல்வி கண்ட சென்னை ஆறுதல் வெற்றிபெற கடுமையாக போராடும். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தவேண்டும் என்றால் சென்னை பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து ஆடவேண்டும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாகும்.

மூலக்கதை