இலங்கையில் போராட்டம் நீடிக்கும் நிலையில் இம்மாத இறுதியில் ரணில் இந்தியா வருகை? பிரதமர் மோடியை சந்தித்து கூடுதல் நிதி கேட்க திட்டம்

தினகரன்  தினகரன்
இலங்கையில் போராட்டம் நீடிக்கும் நிலையில் இம்மாத இறுதியில் ரணில் இந்தியா வருகை? பிரதமர் மோடியை சந்தித்து கூடுதல் நிதி கேட்க திட்டம்

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்தித்து, நிதி உதவி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, பசி, பட்டினி, கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக கொழும்பு மற்றும் காலி முகடத்தில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால், ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. கோத்தபயாவும், மகிந்தாவும் பதவி விலகி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. நெருக்கடி முற்றியதால், பிரதமர் பதவியில் இருந்து மகிந்தாவை ராஜினாமா செய்ய கோத்தபய வலியுறுத்தினார்.கடந்த 6ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை கடந்த 9ம் தேதி ராஜினாமா செய்தார். எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால், உயிருக்கு பயந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பி திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மகிந்தாவின் 2வது மகன் யோஷிதா நாட்டை விட்டு ஓடிவிட்டதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார்.இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுடன், 2 நாட்களாக கோத்தபய ஆலோசனை நடத்தினார். இதில், பிரதமராக பதவியேற்க ரணில் விக்ரமசிங்கே சம்மதம் தெரிவித்தார். பதவி ஏற்றாலும், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். இதற்கான விவாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. இவருக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய மற்றும் பல கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மாலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் மாளிகையில் நடந்த விழாவில், அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6வது முறையாக அவர் பிரதமர் ஆகி உள்ளார்.அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இன்று சில முக்கிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இரு தவணையாக இந்தியா, இலங்கைக்கு நிதி உதவி அளித்துள்ளது. தற்போது பிரதமர் மோடியை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, இன்னும் கூடுதல் கேட்கவே ரணில் இந்தியா வர இருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை