ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம், வர்த்தக பற்றாக்குறை 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரலில் 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள், மின்னணு சாதனங்கள், ரசாயனம் ஆகிய துறைகளில் அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த உயர்வு எட்டப்பட்டு உள்ளது.
இறக்குமதியை பொறுத்தவரை, 30.97 சதவீதம் அதிகரித்து, 4.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரலில், வர்த்தக பற்றாக்குறை 1.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டில், இதுவரை இல்லாத வகையில் ஏற்றுமதி அதிகரித்து, புதிய சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டிலும் சாதனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தங்கம் இறக்குமதி, ஏப்ரலில் 72 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரலில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை