நாடு திரும்பினார் கம்மின்ஸ் | மே 13, 2022

தினமலர்  தினமலர்
நாடு திரும்பினார் கம்மின்ஸ் | மே 13, 2022

மெல்போர்ன்: இடுப்பு பகுதி காயத்தால் ‘டி–20’ கிரிக்கெட் லீக் தொடரில் இருந்து விலகிய கோல்கட்டா அணியின் கம்மின்ஸ் தாயகம் திரும்பினார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 29, இந்தியாவில் நடக்கும் ‘டி–20’ கிரிக்கெட் லீக் 15வது சீசனில் கோல்கட்டா அணியில் இடம் பெற்றுள்ளார். வீரர்கள் ஏலத்தில் ரூ. 7.25 கோடிக்கு ஒப்பந்தமான இவர், இம்முறை 5 போட்டியில், 7 விக்கெட் சாய்த்துள்ளார். சமீபத்தில் மும்பைக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற இவரது இடுப்பு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.

 

இதனையடுத்து மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகிய கம்மின்ஸ், உடனடியாக தாயகம் திரும்பினார். இரண்டு வார ஓய்வுக்கு பின், காயத்தில் இருந்து மீண்டு வரத் தேவையான பயிற்சி மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள இலங்கை தொடருக்கு தயாராக உள்ளார். இதனை கோல்கட்டா அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

 

இதுகுறித்து வெளியான செய்தியில், ‘‘போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த கோல்கட்டா வீரர் கம்மின்ஸ், உடனடியாக நாடு திரும்பினார். இரண்டு வாரம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்,’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் கோல்கட்டா அணி நிர்வாகம் சார்பில் கம்மின்சிற்கு மாற்று வீரர் நியமிக்கப்படவில்லை.

மூலக்கதை