திட்டமிட்டப்படி மே 21ம் தேதி மருத்துவ முதுநிலை நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திட்டமிட்டப்படி மே 21ம் தேதி மருத்துவ முதுநிலை நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 21ம் தேதி 2022-க்கான முதுநிலை நீட் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2022ம் ஆண்டு நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில், ‘ஏற்கனவே 2021ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால், 2022க்கான தேர்வை நடத்தினால் பெரும் குழப்பம் ஏற்படும். எனவே, வரும் 21ம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.நீதிபதி டி.ஒய்.சந்திராசூட் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் உட்பட அனைவரும். ‘2021-க்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத வாய்ப்புள்ளது. எனவே, வரும் 21ம் தேதி நடைபெறும் 2022ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்,’ என கோரினர். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முதுநிலை நீட் தேர்வை வரும் 21ம் தேதி நடத்த தடை விதிக்க முடியாது. இது, அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. தேர்வு தேதியை மாற்றக்கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என அறிவித்தனர்.

மூலக்கதை