ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஞானவாபி மசூதியில் அதிகாரிகள் குழு கள ஆய்வு செய்ய தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. ‘இந்த  மசூதியின் சுற்றுச்சுவருடன் இணைந்து உள்ள சிங்கார கவுரியம்மன் கோயில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்,’ என்று வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த ஆய்வுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மஜித் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.  அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘நாங்கள் ஆவணங்களை பார்க்கவில்லை. என்ன விஷயம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. விவரம் தெரியாமல் எப்படி தடை பிறப்பிக்க முடியும்? ஆவணங்களை படித்த பிறகே உத்தரவு பிறப்பிக்க முடியும். அதே நேரம், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க தயார்,’ என்று தெரிவித்தனர்.நீதிபதி அச்சம்: வாரணாசி நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ரவிகுமார் திவாகர் நேற்று கூறுகையில், ‘‘ஒரு சாதாரண  சிவில் வழக்கு தற்போது  அசாதாரணமான வழக்காக மாறி உள்ளது. என்னுடைய  பாதுகாப்பு குறித்து எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். வழக்கின் தன்மையால் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

மூலக்கதை