ஆடுகளம் சூப்பர்... சாம்ஸ் உற்சாகம்

தினகரன்  தினகரன்
ஆடுகளம் சூப்பர்... சாம்ஸ் உற்சாகம்

மும்பை: நடப்பு ஐபிஎல் டி20 தொடரில் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படுவது நல்ல விஷயம் என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் டேனியல் சாம்ஸ் கூறியுள்ளார். சென்னை - மும்பை அணிகள் நேற்று முன்தினம் மோதிய ஆட்டத்தில் 2 பக்கமும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது.  முதலில் விளையாடிய சென்னை 16 ஓவரில் வெறும் 97 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து விளையாடிய மும்பை அணியும் தட்டுத் தடுமாறியே வென்றது.  அந்த ஆட்டத்தில்  4 ஓவர் பந்துவீசி 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்த மும்பை வீரர் டேனியல் சாம்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இது குறித்து அவர் கூறியதாவது: முதல் சில ஆட்டங்கள்  திட்டமிட்டபடி  செல்லவில்லை. அது குறித்து ஆலோசிக்க நேரம் கிடைத்தது.  எனது திறமையின் அடிப்படையில் இல்லாமல், பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அதற்கு ஏற்ப பந்து வீசினேன்.  பயிற்சியில் கிடைத்த அனுபவமும் கை கொடுத்தது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு மாதிரி திட்டம் வைத்திருந்தோம். நிறைய பவுன்சர்களை வீசினோம். பேட்டிங்கின்போது 3வதாக இறங்கியது உற்சாகமான தருணம்.அது குறித்து தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே உடன் பேசினேன். பேட்டுடன்   தொடர்பில் இருப்பதை விட மகிழ்ச்சியான தருணம் வேறு எதுவுமில்லை. மொத்தத்தில் ஐபிஎல் முழுவதும் விக்கெட்களை வீழ்த்த ஏற்ற அருமையான ஆடுகளங்களாக இருக்கின்றன. அனுபவித்து ஆடுகிறேன்.  இன்றும் களம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதுவும் டி20 ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது நல்ல விஷயம்.இவ்வாறு சாம்ஸ் கூறியுள்ளார்.

மூலக்கதை