இலங்கையில் அரசியல் குழப்பம் ரணிலை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்: புதிய அரசு அமைப்பதில் சிக்கல்

தினகரன்  தினகரன்
இலங்கையில் அரசியல் குழப்பம் ரணிலை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்: புதிய அரசு அமைப்பதில் சிக்கல்

கொழும்பு: இலங்கையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமனத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பதால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மக்களின் விருப்பப்படி, அனைத்து கட்சிகளும் அடங்கிய இடைக்கால கூட்டணி ஆட்சிக்கு பொறுப்பேற்க எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால் அதிபர் பதவியிலிருந்து கோத்தபய விலகினால் மட்டுமே ஆட்சிப் பொறுப்பேற்பேன் என பிரேமதாசா திட்டவட்டமாக கூறினார். மகிந்தா பதவி விலகிய பிறகு, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய விலக வேண்டுமென தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இதற்கு சம்மதிக்காத கோத்தபய, முன்னாள் பிரதமர் விக்ரமசிங்கேவை புதிய பிரதமராக அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, இலங்கையின் 26வது பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நியமனத்தை இலங்கையின் எந்த எதிர்க்கட்சியும் ஏற்கவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியே கூட ரணிலின் நியமனத்தை ஏற்கவில்லை. அக்கட்சியின் எம்பி விமல் வீரவன்சா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராஜபக்சே - விக்ரமசிங்கே அரசில் நாங்கள் அங்கம் வகிக்க முடியாது’’ என்றார். முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திரா கட்சியும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெராமுனா கட்சியும் (ஜேவிபி), ரணில் அரசில் அங்கம் வகிக்கப் போவதில்லை என அறிவித்துள்ன. பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறுகையில், ‘‘ஐக்கிய தேசிய கட்சி தலைவர் விக்ரமசிங்கே 2020 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில், அவர் பிரதமராக பதவியேற்க சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. எனவே அமைச்சர் பதவிகளை நாங்கள் ஏற்க மாட்டோம். விக்ரமசிங்கே உடனடியாக பதவி விலக வேண்டும்’’ என்றார். ஜேவிபி கட்சி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அளித்த பேட்டியில், ‘‘ மக்கள் ஆதரவு விக்ரமசிங்கேக்கு இல்லை என்பதால்தான் கடந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. தேசிய பட்டியலில் இருந்து விக்ரமசிங்கே எம்பியாகி உள்ளார்’’ என்றார்.அதே சமயம், ரணில் விக்ரமசிங்கேவின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக சில எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன. இதனால், ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.பொருளாதாரத்தை மீட்பதில் கவனம் தற்போதைய சூழலில், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிப்பதாக புதிய பிரதமர் விக்ரமசிங்கே கூறி உள்ளார். இதற்காக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், மருந்துகள் கிடைக்கவும், எரிபொருள் சப்ளை தடையின்றி செய்யவும் தனது கட்சியினரைக் கொண்டு சிறப்பு குழுவை விக்ரமசிங்கே அமைத்துள்ளார். தனது பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி, அனைத்து கட்சிகளின் உதவியுடன் அமைச்சரவை அமைப்பேன் என ரணில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை