ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதி; காரியத்தை சாதிக்கும் சாதுர்யம் கை கொடுக்குமா?; காத்திருக்கும் மும்முனை தாக்குதல்: சவாைல சமாளிப்பாரா ரணில்

தினகரன்  தினகரன்
ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதி; காரியத்தை சாதிக்கும் சாதுர்யம் கை கொடுக்குமா?; காத்திருக்கும் மும்முனை தாக்குதல்: சவாைல சமாளிப்பாரா ரணில்

படுபாதாளத்தில் நாட்டின் பொருளாதாரம்… கைக்கு எட்டிய பிரதமர் பதவி வாய்க்கு எட்டாத விரக்தியில் முரண்டு பிடிக்கும் எதிர்க்கட்சிகள்… ராஜபக்சே குடும்பத்தின் மீதான வெறுப்பால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள்… இந்த படுசிக்கலான சவால்களை முறியடித்து, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, விலைவாசியை கட்டுப்படுத்தி, இலங்கையை மீண்டும் சுற்றுலா நாடாக மாற்றி, உலக அரங்கில் தலைநிமிரச் செய்வதுதான் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே முன்னே உள்ள பிரதான பொறுப்பு. சர்வ அதிகாரத்தையும் கொண்டுள்ள ராஜபக்சே குடும்பத்தினாரால் முடியாத இந்த விஷயங்களை, ரணில் விக்ரமசிங்கே என்ற ஒற்றை மனிதரால் செய்ய முடியுமா என்றால், ‘அவர் நிச்சயம் இலங்கையின் நிலைமையை மாற்றிக் காட்டுவார்’ என்கின்றனர் அந்நாட்டு அரசியல் நிபுணர்கள். அதனால்தான், அனைத்து எதிர்ப்பையும் மீறி, பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறிந்த ரணிலை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வந்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. ரணில் தற்போது 6வது முறையாக இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அதுவும் மக்களால் தேர்வு செய்யப்படாமலும், நேரடியாக அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவருடைய கட்சிக்கு ஒற்றை எம்பி. பதவி மட்டுமே உள்ளது. அதுவும் அவர்தான். அப்படிப்பட்ட நிலையில், இந்த ஒற்றை எம்பி இடத்தை வைத்து கொண்டு பிரதமர் பதவியை பிடித்திருக்கிறார். இவர் அனுபவசாலி, அமைதியாக காரியத்தை சாதிக்கும் அதி புத்திசாலி என்பதற்கு இது ஒன்றே சாட்சி. இந்த அடிப்படையில்தான் கோத்தபயவும் இவரை பிரதமராக்கி இருக்கிறார்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராஜபக்சே அலை அபரிமிதமாக வீசியதில், அதற்கு முதலில் வீழ்ந்தவர் ரணில் விக்ரமசிங்கேதான். இவருடைய கட்சியே உடைந்தது. அவரிடம் இருந்து பிரிந்து சென்றவர்தான் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா. தனி எம்பி.யாக நாடாளுமன்றத்தில் வலம் வந்த ரணிலால், இனி தேசிய அரசியலில் எடுபட முடியாது என்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலையில், அவருக்கு  கிடைத்துள்ள பொன்னான, அதிர்ஷ்ட வாய்ப்புதான் இந்த பிரதமர் பதவி. இதை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் அவரும் தீவிரமாக உள்ளார். ரணிலின் ஆளுமைதான் அவரை பிரதமராக நியமிக்க கோத்தபயவை தூண்டியிருக்கிறது. எதற்கும் பதற்றப்படாமல், அவசரப்படாமல், பொறுமை காத்து. அவமானங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல், விமர்சனங்களை இயல்பாக எடுத்துக் கொண்டு, தெளிவான தொலைநோக்கு பார்வை கொண்ட அசத்தலான ஆளுமை பண்பை கொண்டவர் ரணில். நிதானமாக காய்களை நகர்த்தி காரியங்களை சாதிக்கக் கூடியவர்.கடந்த 2 ஆண்டாக நாடாளுமன்றத்தில் பல அரசியல் குழப்பங்கள், கட்சி தாவல்கள் நிகழ்ந்த போதிலும் ரணில் தனித்தே நின்றார். இலங்கை எதிர்கொள்ளப் போகும் பொருளாதார இடர்கள் குறித்து அவ்வப்போது ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரித்தபடி இருந்தார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சர்வதேச நாடுகளுடன் ரணில் நெருங்கிய நட்புறவை கொண்டிருந்தார். இலங்கையின் உண்மை விஷயங்களை அறிய பல நாட்டு தூதரகங்கள் ரணிலையே அதிகம் நம்பின. அவருடன் எப்போதும் தொடர்பில் உள்ளன. வெளியுறவுக் கொள்கைகளில் மென்மைப் போக்கை கடைபிடிப்பவர் ரணில். இந்தியாவின் நட்பை எப்போதும் விரும்பும் அவர், மேற்கத்திய நாடுகளுடனான உறவையும் பேணிக்காப்பவர்.ஆனால், இப்படிப்பட்ட இவருக்கும் எதிர்க்கட்சிகள் மூலமாக  முதல் கோணல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தொல்லை, பொருளாதார சீர்கேடுகள், போராட்டக்கார்களின் எச்சரிக்கை என  மும்முனை தாக்குதலை சந்திக்க வேண்டிய  நிலையில் இருக்கிறார்.  தற்போது இவரின் முன்புள்ள முதல் பிரச்னையே புதிய அமைச்சரவை அமைப்பதுதான். ஆனால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும், போராட்டககாரர்களின் எச்சரிக்கையும் இவரை அசைத்துள்ளன. இவரது நியமனத்தை எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்க, புத்த துறவிகள் உள்ளிட்ட பலரும் எதிர்க்கின்றனர். 10 கட்சிகளின் புதிய குழு, பிரதமர்  ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசாங்கத்தில் இணையாது என தெரிவித்துள்ளது. ரணில் அரசில் அங்கம் வகிக்கப் போவதில்லை, அமைச்சர் பதவிகளை ஏற்கப் போவதில்லை என இலங்கை சுதந்திரா கட்சியும் தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஸ்திரமான அரசாங்கம் இன்றியமையாதது என்பதால், அதற்கான சரியான செயல்பாடுகளை ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பி எம்.ஏ.சுமந்திரன் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதே போல், எதிர்க்கட்சியில் உள்ள பலரும் ரணிலுக்கு ஆதக்ஷரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்னும் ஓரிரு நாளில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் சமாதானப்படுத்தி அமைச்சரவை அமைக்கும் நடவடிக்கையில் ரணில் இறங்கி விடுவார்.அடுத்ததாக, போராட்ட களத்தில் உள்ள மக்கள். குறிப்பாக, மக்களின் முக்கிய கோரிக்கை அதிபர் கோத்தபயவை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். அதோடு, அதிபரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும், பொருளாதார நெருக்கடியை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான். இதை செய்யாவிட்டால், மகிந்தாவை விரட்டியடித்தது போல, ரணிலையும் விரட்டி அடிக்க தயங்க மாட்டோம் என கோத்த கோ பேக் போராட்டக் குழுவினர் நேற்று எச்சரித்துள்ளனர். “சரி போராடுங்கள். எக்காரணம் கொண்டும் போலீசார் உங்களை அகற்றமாட்டார்கள். மீண்டும் வன்முறை வெடிக்காத வரை, போராட்டக்காரர்களை கண்டதும் சுட வேண்டுமென்ற உத்தரவை அனுமதிக்க மாட்டேன்” என ரணில் பதில் அளித்துள்ளார். இதுதான் அவரது அரசியல். ரணில் பதவியேற்றதுமே, இலங்கை பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றம் கண்டன. சர்வதேச சந்தையில் இலங்கையின் ரூபாய் மதிப்பு சற்று ஏற்றம் கண்டுள்ளது. பல உலக நாடுகளும் ரணிலை பிரதமராக்கியதை வரவேற்றுள்ளனர். ரணில் வரவால், இலங்கையில் ஸ்திரமான அரசு அமையும் என நம்புகின்றன. இலங்கையில் உறுதியான அரசு அமைந்தால், நிச்சயம் அதன் நிலைமை மாறும். சர்வதேச நிதியம், உலக வங்கி, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் உலக அமைப்புகளுடன் ரணில் நட்புறவை கொண்டுள்ளார். எனவே அவருக்காகவே இலங்கைக்கு நட்பு நாடுகளும், உலக அமைப்புகளும் கடன்களை வாரி வழங்கும். அதன் மூலம் பொருளதாரம் மேம்படும். ஜனநாயகம் மீட்கப்பட்டால், சுற்றுலா புத்துயிர் பெறும். இதன் மூலம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நிறைவேறி, போராட்ட களம் காலியாகிவிடும். எனவேதான், அமைச்சரவை அமைக்கும் விஷயத்திலும் ரணிலுக்கு முழு அதிகாரத்தை தந்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. ரணில் தலைமையில் உறுதியான அரசு அமைந்தால், அது இலங்கையின் தலைவிதியை மீண்டும் மாற்றி அமைக்கும் என சிங்களர்களும் நம்புகின்றனர்.இந்தியா, அமெரிக்கா ஆதரவு: இலங்கையின் 26வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்கேக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதமராக பொறுப்பேற்றதுமே வெளிநாடுகளின் ஆதரவை திரட்ட ரணில் காய் நகர்த்தி வருகிறார். முதலில் அண்டை நாடான இந்திய தூதரை சந்திக்க வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதன்படி, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே நேற்று பிரதமர் ரணிலை நேரில் சந்தித்து பேசினார். இதில் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் நெருக்கமான உறவை இலங்கை விரும்புவதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு ஏற்கனவே பல்வேறு கடன் உதவிகளை தந்துள்ள இந்தியா மேலும், ரூ.22,500 கோடி கடன் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது டிவிட்டர் பதிவில், ‘ரணில் அரசுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டது, அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் உருவாக்கம். நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான முதல் படி,’ என கூறி உள்ளார். 8 அம்ச கோரிக்கை: இலங்கையில் தொடரும் போராட்டங்களும், ‘மகிந்தாவை போல் ரணிலையும் விரட்டத் தயங்க மாட்டோம்’ என்ற எச்சரிக்கைகளும், ஒத்துழைக்க மறுக்கும் எதிர்க்கட்சிகளும் ரணிலுக்கு நிச்சயம் கடினமான சவால்களாகும். இதை சமாளித்து அவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்க வேண்டும். இந்நிலையில், ‘கோத்தபய கோ பேக்’ போராட்டக் குழுவினர் அவர்களின் 8 அம்ச கோரிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:* அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும்.*  இடைக்கால அரசில் 15 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க வேண்டும். 18 மாதம் மட்டுமே இடைக்கால அரசு இருக்க வேண்டும். * அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், அரசியலமைப்பின் 20வது சட்டத் திருத்தத்தை நீக்கி, புதிய 21வது திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.* பொருளாதார நெருக்கடி, பாதிக்கப்படக் கூடிய சமூகங்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும்.* தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய எம்பிக்களின் சொத்துக்களை கணக்கிட வேண்டும்*  ஆட்சியாளர்கள் நிதி மற்றும் வேறுவகையில் செய்த அனைத்து குற்றங்களையும் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும்.* அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.* நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தமிழர்களுக்கு கஷ்டகாலம்: இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில் ரணிலின் வருகை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். உண்மையிலேயே இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ராஜபக்சேக்களை விட மோசமானவர் ரணில்தான். வெளியுறவில் கில்லாடியான ரணில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக உலக நாடுகளிடம் தவறான பிம்பத்தை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவர். இதன் மூலம், புலிகளை வலுவிழக்க செய்தார். மற்ற சிங்கள ஆட்சியாளர்கள் குருட்டுத்தனமாக, அதிகார மோகத்தால், புத்திச்சாதுர்யமற்ற வகையில் செயல்பட்ட நிலையில், மிகச்சாதுர்யமாக வலைவீசி அதில் இலங்கைத் தமிழர்களை சிக்க வைத்தவர்தான் ரணில். கடந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இவர் நெருக்கம் காட்டியதால், சிங்களர்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இதனால், இனியும் அந்த தவறை அவர் செய்ய மாட்டார். இது இலங்கை தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்கின்றனர். அதே சமயம், ராஜபக்சேக்களையும் கடும் தண்டனைகளில் இருந்து காப்பாற்றக் கூடிய நபராகத்தான் ரணில் இருப்பார் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை