டிவிட்டரை வாங்கும் முடிவு எலான் மஸ்க் திடீர் நிறுத்தம்

தினகரன்  தினகரன்
டிவிட்டரை வாங்கும் முடிவு எலான் மஸ்க் திடீர் நிறுத்தம்

லண்டன்: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக எலான் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். டெஸ்லா நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், டிவிட்டர் பயனாளர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். டிவிட்டரை வாங்க வேண்டும் என்ற தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் டிவிட்டர் நிறுவனத்தை ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்குவது   கடந்த மாதம் உறுதியானது. இதற்கான பணத்தையும் அவர் திரட்டி வந்தார். இதற்கிடையே, போலி டிவிட்டர் கணக்குகளை முடக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் போலி கணக்குகள் கட்டுப்படுத்தப்படும் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், மொத்த பயனாளர்களில் 5%க்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மஸ்க் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்ட அவகாசம் தேவைப்படுவதால் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார். அவரது கருத்து குறித்து டிவிட்டர் நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை. எலான் மஸ்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 18 சதவீதம் சரிந்தது. டெஸ்லாவின் பங்குகள்  விலை 5 சதவீதம் உயர்ந்தன.

மூலக்கதை