இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணிலுக்கும் எதிர்ப்பு வலுக்கிறது; அமைச்சரவை பதவி ஏற்பதில் தாமதம்

தினகரன்  தினகரன்
இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணிலுக்கும் எதிர்ப்பு வலுக்கிறது; அமைச்சரவை பதவி ஏற்பதில் தாமதம்

கொழும்பு: இலங்கையில் புதிய பிரதமராக பதவி ஏற்ற ரணில் விக்கிரமசிங்கேவிற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் அங்கு புதிய அமைச்சரவை அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆனாலும் தொடர்ந்து போராட்டமும் நீடிப்பதால், தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் கோத்தபய அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. அசாதாரண சூழ்நிலையால் கடந்த 9ம் தேதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பதற்றம் நிலவிய நிலையில், அன்றைய தினம் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில் இலங்கை முழுவதும் பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டையும், சொகுசு கார்களையும் போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்பி அமரகீர்த்தி அத்துகோரளா, அவரது பாதுகாவலர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஒரே எம்பியுமான ரணில் விக்ரமசிங்கே சந்தித்தார். அவர் தான் பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6வது முறையாக அவர் பிரதமராகி உள்ளார். ஒரு எம்பியாக தனித்து நிற்கும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றது, ராஜபக்சே குடும்பத்தை பாதுகாப்பதற்காகத்தான் என்று போராட்டக் களத்தில் உள்ள மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக ஏன் தேர்வு செய்யப்பட்டார்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, அதிபர் கோத்தபயக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் அடிப்படையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும். அதிபர் பதவி விலகுவதை உறுதிப்படுத்த வேண்டும், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற முறையில், பிரதமர் பதவியை ஏற்கவும் நான் தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கான எனது முந்தைய அழைப்பை ஏற்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே நான் ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தேன். நாடு மிகப்ெபரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில், அனைத்து சவால்களுக்கும் தீர்வு காண்பதற்காகவே பலமுறை பிரதமர் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கேவை நியமித்துள்ளேன். அதனை மாற்ற முடியாது. உங்கள் கட்சி உறுப்பினர்களில் யாரையாவது அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அதை எனக்குத் அறிவியுங்கள்’ என்று அந்த கடிதத்தில் பதிலளித்துள்ளார். கோத்தபய எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ள நிலையில், சஜித் பிரேமதாசவின் தாமதத்தால் அவருக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்பு பறிபோகி உள்ளது. இலங்கையில் அசாதாரண சூழல் நீடிப்பதால், வரும் 17ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அதற்கு முன்னதாக புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் என்று பரவலாக பேசப்படுகிறது. பிரதமர் ரணில் தலைமையில் 20 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும், எதிர்கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அமைச்சர்களின் இலாகா பட்டியல் வெளியாக சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம் கூடும்போது, அதிபர் கோத்தபயவேவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதேநேரம் புதிய பிரதமர் ரணில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே போராட்டக்களத்தில் உள்ள மக்கள், ‘ரணில்-ராஜபக்சே கோபேக்’ என்ற முழக்கத்துடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனால் இலங்கை விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. ரணிலுக்கு எதிராகவும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

மூலக்கதை