சென்னை அணி சொதப்பல் ஆட்டம் * 97 ரன்னுக்கு சுருண்டது | மே 12, 2022

தினமலர்  தினமலர்
சென்னை அணி சொதப்பல் ஆட்டம் * 97 ரன்னுக்கு சுருண்டது | மே 12, 2022

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ‘டி–20’ போட்டியில்5 விக்கெட்டில் தோல்வியடைந்த சென்னை அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது. ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் நான்கு முறை சாம்பியன் சென்னை, ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பையை சந்தித்தது. ஏற்கனவே ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘டாஸ்’ வென்று ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சரிந்த துவக்கம் 

இப்போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்கலாம் என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

கான்வே, ருதுராஜ் ஜோடி இம்முறை ஏமாற்றமான துவக்கம்தந்தது. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கான்வே ‘டக்’ அவுட்டானார். அடுத்த இரண்டாவது பந்தில் மொயீன் அலியும் ‘டக்’ அவுட்டாகி திரும்பினார்.இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், உத்தப்பாவை (1) வெளியேற்றினார் பும்ரா. சென்னை அணி 5 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

மீண்டும் வந்த சாம்ஸ், ருதுராஜை (7) அவுட்டாக்கினார்.விக்கெட்டுகள் சரிந்த நிலையில் பொறுப்பாக விளையாட வேண்டியராயுடு (10), மெரிடித் பந்தில் அவுட்டாகி, அணியை ‘அம்போ’ என தத்தளிக்க விட்டுச் சென்றார். தோனி, துபே இணைந்தனர்.

மீண்டும் ‘இரண்டு’

மெரிடித் பந்தில் பவுண்டரி அடித்த துபே (10), அதே வேகத்தில் வெளியேறினார். கார்த்திகேயா ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விளாசியதோனி, ஷொகீன் பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.போட்டியின் 13வது ஓவரை கார்த்திகேயா வீசினார்.

இவரது முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பிராவோ (12) அடுத்த பந்தில் திலக் வர்மாவிடம் ‘கேட்ச்’ கொடுத்தார். இதே ஓவரின் 5வது பந்தில் சிமர்ஜீத் சிங் (2) அவுட்டானார். அடுத்து தீக்சனாவும் (0) அவுட்டானார்.

கடைசி விக்கெட்டுக்கு தோனியுடன்சேர்ந்தமுகேஷ் சவுத்ரி (4) ரன் அவுட்டானார்.சென்னை அணி 16 ஓவரில் 97 ரன்னுக்கு சுருண்டது. கடைசி வரை போராடிய தோனி (36) அவுட்டாகாமல் இருந்தார்.

ரோகித் ‘அவுட்’

அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு, முகேஷ் சவுத்ரி ‘வில்லனாக’ திகழ்ந்தார். இவரது ‘வேகத்தில்’ முதலில் இஷான் கிஷான் (6) அவுட்டானார். 14 பந்தில் 18 ரன் எடுத்த ரோகித்தை, சிமர்ஜீத் அவுட்டாக்கினார். மறுபக்கம் மீண்டும் மிரட்டிய முகேஷ், டேனியல் சாம்ஸ் (1), திரிஸ்டனை (0) வெளியேற்றினார்.

பின் இணைந்த ஹிர்திக் ஷொகீன், திலக் வர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, வெற்றியை வேகமாக நெருங்கியது மும்பை. ஷொகீன் (18) போல்டானார். மொயீன் ஓவரில் டேவிட் இரண்டு சிக்சர் விளாச, மும்பை அணி 14.5 ஓவரில் 103/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திலக் (34), டேவிட் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

12 போட்டியில் 4ல் மட்டும் வென்ற சென்னை (8 புள்ளி), மீதமுள்ள 2 போட்டியில் வென்றாலும், ‘டாப்–4’ இடம் பெற முடியாது என்பதால், ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்தது.


‘டி.ஆர்.எஸ்.,’ சர்ச்சை

சென்னை அணி பேட்டிங் செய்த போது துவக்கத்தில் ‘பவர் கட்’ காரணமாக முதல் 10 பந்துகளுக்கு ‘டி.ஆர்.எஸ்.,’ தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை.

டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் சென்னை வீரர் கான்வேவுக்கு ‘எல்.பி.டபிள்யு.,’ அவுட் தரப்பட்டது. பந்து ‘ஸ்டம்சை’ விட்டு விலகிச் சென்ற நிலையில், ‘டி.ஆர்.எஸ்.,’ தொழில்நுட்பம் வேலை செய்யாததால் அப்பீல் செய்ய முடியவில்லை. கான்வே நடையை கட்டினார்.

* அடுத்து உத்தப்பாவுக்கு, பும்ரா பந்தில் ‘எல்.பி.டபிள்யு.,’ அவுட் தரப்பட்ட போதும் ‘டி.ஆர்.எஸ்.,’ வேலை செய்யவில்லை. இதன் பிறகு தான் சரி செய்யப்பட்டது. முக்கிய அணிகள் மோதும் போட்டியில் இப்படி தொழில்நுட்பம் வேலை செய்யாதது வியப்பாக இருந்தது.

* தவிர, ‘டாஸ்’ போடுவதற்கு சற்று முன் மின்னொளி கோபுரத்தில் விளக்குகள் அணைந்தன. 

 

97

நேற்று 97 ரன்னுக்கு ஆல் அவுட்டான சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2013ல் மும்பைக்கு எதிராக 79 ரன்னுக்கு சுருண்டது. 

மூலக்கதை