முதல் அரைச்சதம்: வெட்டிப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி: இது அஸ்வின் அசத்தல்

தினகரன்  தினகரன்
முதல் அரைச்சதம்: வெட்டிப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி: இது அஸ்வின் அசத்தல்

சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிசந்திரன். ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்(113ஆட்டங்கள்), டெஸ்ட் போட்டிகளில் 442விக்கெட்(86) டி20 போட்டிகளில் 61விக்கெட்(51) ஐபிஎல் போட்டிகளில் 154விக்கெட்(179) என்று பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். இன்றுவரை ஐபிஎல் தொடர்களில் சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்த டாப் 10 பந்து வீச்சாளர்களில் அஷ்வினும் ஒருவர். இந்தபட்டியலில் இருக்கும் 3 இந்திய பந்து வீச்சாளர்களில் அஷ்வினும் ஒருவர். மற்ற 2 பேர் அனில் கும்ப்ளே, வாஷிங்டன் சுந்தர். இருந்தும்  இடையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஷ்வினுக்கு வாய்ப்பு தந்தனர்.ரவீந்திர ஜடேஜா, யஜ்வந்திர சாஹல் ஆகியோரை விட சிக்கனமாக பந்து வீசியும், விக்கெட்களை அள்ளியும் டெஸ்ட் போட்டிகளில் கூட ஆட விடாமல் உட்கார வைத்தது கேப்டன் விராத் கோஹ்லியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணி. டோனி தான் டி20 ஆட்டங்களிலும் வாய்ப்பு தராமல் அஷ்வினை முதலில் ஓரம் கட்டியவர். வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் முதல் பகல்/இரவு டெஸ்ட் ஆட்டத்தில் அஷ்வின் களமிறக்கப்பட்டும், பந்து வீச வாய்ப்பு தரவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கவில்லை. ஆட விட்டிருந்தால் அப்போதே கபில் சாதனையை முறியடித்திருப்பார்.இப்படி வாய்ப்புகள் தராமல் பொறுப்பில் இருப்பவர்கள், ‘ஜடேஜாவை போல் ரன் குவிப்பதில்லை’என்று அஷ்வினை விமர்சனம் செய்தனர். அஷ்வினை ஒதுக்கி வைத்த ‘அரசியலை’ பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் உட்பட பலர் விமர்சனம் செய்தனர். அதன் பிறகு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசியதின் மூலம் தன்னால் டி20 ஆட்டத்திலும் ரன் குவிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். ஆனாலும் சிலர் ‘72வது இன்னிங்சில் தானே முதல் அரைச்சதம் அடித்தார்’ என்று  தங்கள் விமர்சனத்தை கைவிடவில்லை. ஆனால் ஜடேஜா 132வது இன்னிங்சில்தான் தனது முதல் அரைச்சதத்தை அடித்தார். ‘அதனால் பொறுப்பில் இருப்பபவர்கள் வீண் பேச்சை விட்டுவிட்டு திறமையானவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். ஊர், பேர் பார்க்காமல் திறமைகளை அங்கீகரிக்க வேணடும்’ என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

மூலக்கதை