ரெய்னா வழியில் ஜடேஜா * பாதியில் விலகியது ஏன் | மே 12, 2022

தினமலர்  தினமலர்
ரெய்னா வழியில் ஜடேஜா * பாதியில் விலகியது ஏன் | மே 12, 2022

மும்பை: சென்னை அணிக்காக ஜடேஜா இனிமேல் விளையாடுவது சந்தேகம். 

சென்னை அணி ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா. 15வது ‘டி–20’ சீசனில் கேப்டனாக களமிறங்கினார். முதல் நான்கு போட்டியிலும் சென்னை அணி தோற்க நெருக்கடி ஏற்பட்டது. தனது தலைமையில் 8 போட்டியில் 2ல் மட்டும் வென்றதால், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஜடேஜா. 

தவிர மீண்டும் தோனி கேப்டனாக வேண்டும் என கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய தோனி,‘கேப்டன் பதவி ஜடேஜாவுக்கு நெருக்கடி தந்தது,’ என்றார். இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகத்துக்கும், ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. 

10 போட்டியில் (116 ரன், 5 விக்.,) ஜடேஜா செயல்பாடு பெரியளவு இல்லை. இந்நிலையில் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டில்லி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா களமிறங்கவில்லை. தற்போது காயத்தின் தன்மை காரணமாக ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகுவதாக ஜடேஜா அறிவித்தார்.

இதனிடையே ‘இன்ஸ்டாகிராமில்’ ஜடேஜா பின் தொடர்வதை சென்னை அணி நிர்வாகம் நிறுத்திவிட்டது. இது மோதலை உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த சீசனில் இப்படித்தான் ‘சின்ன தல’ என செல்லமாக அழைக்கப்பட்ட ரெய்னா, காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. 

கடைசியில் இவரை கழற்றி விட்டது சென்னை. ஏலத்திலும் வாங்கவில்லை. இதுபோல 33 வயதான ஜடேஜா, தொடரின் பாதியில் விலகியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஏலத்தில் டுபிளசியை வாங்காமல் தவறு செய்த சென்னை, தற்போது ஜடேஜாவையும் கழற்றி விடத் தயாராகியுள்ளது. 

 

இது நல்லது

இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறுகையில்,‘‘சென்னை அணியில் ஜடேஜா நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. இவருக்கு என்ன காயம் ஏற்பட்டது, கேப்டன் பதவி எந்தளவுக்கு பாதித்தது எனத் தெரியாது. ஆனால் சென்னை அணியுடனான ஜடேஜாவின் பிணைப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. அவருக்கும், அணி நிர்வாகத்துக்கும் இது நல்லது தான்,’’ என்றார். 

மூலக்கதை