சபாஷ் மார்ஷ்... டில்லி ‘ஜாலி’ * அஷ்வின் அரைசதம் வீண் | மே 11, 2022

தினமலர்  தினமலர்
சபாஷ் மார்ஷ்... டில்லி ‘ஜாலி’ * அஷ்வின் அரைசதம் வீண் | மே 11, 2022

நவி மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ‘டி–20’ போட்டியில் டில்லி அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய மார்ஷ், 89 ரன் குவித்தார். அஷ்வின் அரைசதம் வீணானது. 

இந்தியாவின் நவி மும்பையில் நேற்று நடந்த ‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், பீல்டிங் தேர்வு செய்தார்.

பட்லர் ஏமாற்றம்

ராஜஸ்தான் அணிக்கு பட்லர், ஜெய்ஸ்வால் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 11 பந்தில் 7 ரன் மட்டும் எடுத்து சக்காரியா ‘வேகத்தில்’ வெளியேறினார்.

அடுத்து ‘சீனியர்’ அஷ்வின் களமிறங்கினார். ஷர்துல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்த அஷ்வின், பின் வந்த அக்சர் படேல் ஓவரில், தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என அடுத்தடுத்து விளாசினார். ஜெய்ஸ்வால் (19), மிட்சல் மார்ஷிடம் சிக்கினார்.

அஷ்வின் அரைசதம்

வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்தார் தேவ்தத் படிக்கல். இதன் பின் அஷ்வின், படிக்கல் இணைந்து ஒன்றும், இரண்டுமாக ரன் சேர்த்தனர். திடீரென குல்தீப் பந்தில் அஷ்வின் சிக்சர் அடிக்க, அக்சர் படேல் ஓவரில் படிக்கல் அடுத்தடுத்து இரு சிக்சர் விளாச, ஸ்கோர் சற்று ‘வேகம்’ எடுத்தது.

ராஜஸ்தான் அணி 13.3 ஓவரில் 100/2 ரன் எடுத்தது. சக்காரியா பந்தில் பவுண்டரி அடித்த அஷ்வின், 37 பந்தில் ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். இவர் 38 பந்தில் 50 ரன் எடுத்து மார்ஷ் பந்தில் வீழ்ந்தார்.

படிக்கல் நம்பிக்கை

சாம்சன் (6), ரியான் பராக் (9) நீடிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் (48), நார்ட்ஜே பந்தில் அவுட்டாகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கடைசி 18 பந்தில் 21 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. 

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது. துசென் (12), பவுல்ட் (3) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி தரப்பில் சக்காரியா, மிட்சல் மார்ஷ், நார்ட்ஜே தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

மார்ஷ் அபாரம்

எளிய இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு ஸ்ரீகர் பரத் (0), வார்னர் ஜோடி துவக்கம் கொடுத்தது. பவுல்ட் வீசிய 3.3வது ஓவரில் மிட்சல் மார்ஷிற்கு எல்.பி.டபிள்யு., ‘அவுட்’ கேட்கப்பட்டது. அம்பயர் அவுட் தர மறுக்க, ராஜஸ்தான் தரப்பில் ‘டி.ஆர்.எஸ்.,’ முறையில் அப்பீல் செய்யவில்லை. 

‘ரீப்ளேயில்’ பந்து ‘ஸ்டம்சை’ தாக்குவது தெளிவாக தெரிந்தது. ‘டக்’ வாய்ப்பில் இருந்து தப்பிய மார்ஷ், இத்தொடரில் முதல் அரைசதம் விளாச, டில்லி அணியின் வெற்றி உறுதியானது. இந்த ஜோடியை பிரிக்க சாம்சன் எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.

இரண்டாவது விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்த போது சகால் ‘சுழலில்’, மார்ஷ் (89) அவுட்டானார். வார்னர் அரைசதம் எட்டினார். டில்லி அணி 18.1 ஒவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வார்னர் (52), ரிஷாப் (13) அவுட்டாகாமல் இருந்தனர். 

 

427

நேற்று 52 ரன் எடுத்த வார்னர், டில்லி அணிக்காக இதுவரை 10 போட்டிகளில் 427 ரன் குவித்துள்ளார். இதையடுத்து, ஐ.பி.எல்., அரங்கில் அதிகமுறை 400 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தை கோஹ்லி (8), தவானுடன் (8) பகிர்ந்து கொண்டார் வார்னர் (8). முதலிடத்தில் ரெய்னா (9 முறை) உள்ளார். ரோகித் (7) மூன்றாவதாக உள்ளார். 

 

50

ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் விளாசினார் ராஜஸ்தான் அணியின் அஷ்வின். நேற்று இவர் டில்லி அணிக்கு எதிராக 38 பந்தில் 50 ரன் எடுத்தார். இதற்கு முன் 2018ல் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது, 22 பந்தில் 45 ரன் எடுத்ததே அதிகம்.

 

72

ஐ.பி.எல்., வரலாற்றில் தனது 72வது இன்னிங்சில் முதல் அரைசதம் அடித்தார் அஷ்வின். அதிக இன்னிங்சிற்குப் பின் அரைசதம் எட்டிய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் சென்னை அணியின் ஜடேஜா (132 வது) உள்ளார். ஹர்பஜன் (61), ஸ்டீவ் ஸ்மித் (31) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

மூலக்கதை