வெயில் தாக்கம் அதிகரிப்பால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுமா?

தினமலர்  தினமலர்
வெயில் தாக்கம் அதிகரிப்பால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுமா?

கடலுார்-அக்னி நட்சத்திரம் முடிந்தும், கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருவதால் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுமா என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்தாண்டு மார்ச் துவக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் மாத 2வது வாரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்தது.

கடலுார் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி 101 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர காலம் முடிந்ததும் வழக்கமாக வெப்பம் குறையும். ஆனால், கடந்த 28 ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையில் ஜூன் 5ம் தேதியும், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், ஜூன் 1ம் தேதியும் திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளில் அதிகாரிகள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு சில பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. 100 டிகிரிக்குமேல் வெயில் அடித்து வருகிறது.

இதனால் பள்ளிகளில் மாணவர்கள் புழுக்கத்தினால் அவதிப்படுவார்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, பள்ளிகள் திறப்பதை இம்மாதம் 7 ம் தேதிக்கு கல்வி அமைச்சர் ஒத்தி வைத்தார்.

ஆனாலும், வெயில் தாக்கம் குறைந்தபாடில்லை. கடலுார் மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று 104 டிகிரி வெப்பம் பதிவாகியது.

பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், வெப்பம் குறையுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. துவக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்கள் புழுக்கத்தினால் அவதிப்படுவார்கள் என பெற்றோர்கள் கருதுகின்றனர். இதனால் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், தற்போது மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் வெப்பம் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் பருவ மழை துவங்கினால் தான் தமிழகத்தில் வெயில் குறையும்.

தற்போது அந்தமானில் பருவ மழை செட் ஆகி உள்ளது. இன்னும் சில நாட்களில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

கடலுார்-அக்னி நட்சத்திரம் முடிந்தும், கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருவதால் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுமா என பெற்றோர்கள் தரப்பில்

மூலக்கதை