ஒரு வழியாக! பா.ஜ., எம்.பி. மீது எப்.ஐ.ஆர்., பதிவு

தினமலர்  தினமலர்
ஒரு வழியாக! பா.ஜ., எம்.பி. மீது எப்.ஐ.ஆர்., பதிவு

புதுடில்லி: வீராங்கனையரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், 66, மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, புதுடில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர், வீராங்கனையருக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்களும் திரள்வதால், அதிரடி முடிவு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனையர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டனம்



கடந்த, 28ம் தேதி டில்லியில் புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவின் போது, பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனையரை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், குண்டுகட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது; இதற்கு நாடு முழுதும் கண்டனம் எழுந்தது. பிரிஜ் பூஷன் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த வீரர்கள், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றபோது கிடைத்த பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக அறிவித்தனர்.
விவசாய சங்கங்களின் தலையீடு காரணமாக, பதக்கங்களை கங்கையில் வீசும் போராட்டத்தை அவர்கள் ஒத்தி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பும் கருத்து தெரிவித்துள்ளது.
'இன்னும், 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சர்வதேச கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.

பாலியல் சீண்டல்



இந்த விவகாரம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பிரிஜ் பூஷன் மீது அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து புதுடில்லி கன்னாட் பிளேஸ் போலீசார் கூறியதாவது:
பிரிஜ் பூஜனுக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனையர் ஆறு பேர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், ஒரு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 'மைனர்' வீராங்கனை சார்பில், அவரது தந்தை அளித்த புகாரின் படி, மற்றொரு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் நோக்கத்துடன் உடல் பாகங்களை தொடுதல், பாலியல் சீண்டலில் ஈடுபடுதல், தவறான நோக்கத்தில் தவறான இடத்தில் தொடுதல் போன்ற செயல்களில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டதாக, அந்த வீராங்கனையர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், பெண்களின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்துதல், தாக்குவது, பாலியல் தொந்தரவு அளித்தல், பின் தொடருதல், முறையற்ற தொடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், பிரிஜ் பூஷனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ம் தேதியே இந்த எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து மல்யுத்த வீராங்கனையர் தனித் தனியாக போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதில், தங்களுக்கு பிரிஜ் பூஷன் எவ்வாறு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார், மறுப்பு தெரிவித்தவர்களை எப்படி மிரட்டினார், எப்படி அத்துமீறி நடந்து கொண்டார் என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால், பாலியல் ரீதியாக தான் சொல்வதை கேட்க வேண்டும் என அவர் மிரட்டியதாகவும் வீராங்கனையர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரிஜ் பூஷனுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இதற்கிடையே, தன் மீதான புகார்களை மறுத்துள்ள பிரிஜ் பூஷன், 'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் துாங்கில் தொங்குவேன்' என, தெரிவித்திருந்தார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் பேரணி நடத்தப் போவதாக பிரிஜ் பூஷன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், பேரணியை ஒத்தி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனையரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள, 'பாரதிய கிஷான் யூனியன்' என்ற விவசாய சமூக அமைப்பின் ஆலோசனை கூட்டம், 'காப் மகாபஞ்சாயத்து' என்ற பெயரில், நேற்று ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடந்தது.
இதில், 'வரும் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்யாவிட்டால், நாடு முழுதும் போராட்டம் வெடிக்கும். புதுடில்லி ஜந்தர் மந்தரில் விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்' என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனையரின் போராட்டத்துக்கு ஆதரவாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, இர்பான் பதான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடுதல் போட்டி வீரர் அபினவ் பிந்த்ரா ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் அதிரடி முடிவு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

@Image@ முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

புதுடில்லி: வீராங்கனையரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், 66, மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு

மூலக்கதை