கடலில் இட்ட பெருங்காயமாகும் ம.தி.மு.க.,

தினமலர்  தினமலர்
கடலில் இட்ட பெருங்காயமாகும் ம.தி.மு.க.,

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வில், ஒரு கால கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் வைகோ; அவரின் பேச்சை கேட்கவே பெரிய அளவில் கூட்டம் சேரும்.

அப்படிப்பட்ட வைகோ, தி.மு.க.,வானது கருணாநிதியின் சொத்தாகி போனதும், வாரிசு அரசியலை அவர் ஊக்கப்படுத்துகிறார் என்பதை அறிந்ததும், அக்கட்சி உடனான உறவை முறித்து, ம.தி.மு.க., என்ற தனிக்கட்சியை துவக்கினார். அந்த தருணத்தில், தன் பின்னால் வந்த கூட்டத்தை நம்பி, அடுத்த முதல்வர் நாமே என்றும் நம்பினார்.

அரசியலில், தேர்தல் என்பது வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், ஜனநாயகமாக தெரியலாம்; ஆனால், பண நாயகமே வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்கிறது. இந்த சூட்சுமம் வைகோவுக்கு தெரிந்திருந்தாலும், அள்ளிக் கொடுக்க மனம் இன்றி, சந்தித்த தேர்தல்களில் எல்லாம், தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார்.

அதுமட்டுமின்றி, ஒரு காலகட்டத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக அரசியல் செய்ய, சிறிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, அதன் வாயிலாகவும் செல்லாக் காசானார். இனி அரசியலில் பிழைக்க வழி என்ன என்று யோசித்ததால், தன்னை நம்பி வந்தவர்களை, இளிச்சவாயர்களாக எண்ணி, தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தார்.

'ஸ்டாலின், தமிழக முதல்வராகக் கூடாது' என, ஒரு காலகட்டத்தில் கொதித்தவர், 'அவர் முதல்வராக உழைப்பேன்...' என்று பேசியதன் வாயிலாக, கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் இழந்தார்.

'தமிழகம் இவராலே உயரும்' என, மலையாக நம்பிய சிலர், வைகோவுக்காக உயிர் தியாகம் செய்தனர். அந்த அப்பாவிகளுக்கு, போதிய அரசியல் ஞானம் இல்லை என்றே சொல்லலாம்; இல்லையெனில், உயிரை விட்டிருக்க மாட்டார்கள்.

தன்னை நம்பி உயிரை கொடுத்தவர்களின் தியாகத்தை அவமதித்த வைகோ, இப்போது, கட்சியை தன் மகனிடமே ஒப்படைக்க முற்பட்டுள்ளதால், வாரிசு அரசியலை வளர்ப்பதில், கருணாநிதியும், தானும் ஒன்றே என்பதை நிரூபித்து விட்டார்.

'தமிழன் தமிழன்' என்று கூறி ஏமாற்றி வரும் வைகோவை நம்புவோர் இருக்கும் வரை, ம.தி.மு.க., என்ற கட்சி பெயரளவில் தொடரும்; அதன்பின், கடலில் இட்ட பெருங்காயமாக காணாமல் போகும்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வில்,

மூலக்கதை