வனத்துறை அதிகாரிகள் என்ன செஞ்சிட்டு இருந்தாங்களாம்?

தினமலர்  தினமலர்
வனத்துறை அதிகாரிகள் என்ன செஞ்சிட்டு இருந்தாங்களாம்?

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி:

தேனி மாவட்டம் கம்பத்தில், ஊருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானையை, மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில், வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு எஸ்.பி., தலைமையில், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மக்களை நடுங்க வச்ச ஆக்ரோஷமான யானை, தேனி, கம்பம் வரை வந்து, வீடுகள் இருக்கிற பகுதியில ஹாயா, 'வாக்கிங்' போற வரைக்கும், நம்ம வனத்துறை அதிகாரிகள் என்ன செஞ்சிட்டு இருந்தாங்களாம்?

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

வேலுார் மாவட்டம், அத்திமரத்துக் கொல்லை மலைக் கிராமத்தில், பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தை, மருத்துவமனை செல்ல சாலை வசதி இல்லாததால், வழியிலேயே இறந்து விட்டது. குழந்தையின் உடலை பெற்றோர், 10 கி.மீ., சுமந்து சென்றுள்ளனர். ஒடிசா, ஜார்க்கண்டில் மட்டுமே கேள்விப்பட்ட இந்த அவலம், தமிழகத்திலும் நடந்துள்ளது. ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்து, அனைத்து மலை கிராமங்களிலும், ஆறு மாதங்களுக்குள் சாலை அமைக்க வேண்டும்.

ஆறுவழி, எட்டு வழி, பசுமைச் சாலை, பறக்கும் சாலைன்னு டிசைன் டிசைனா திட்டங்களை உருவாக்குற அரசும், சாதாரண சாலை இல்லாததால், மலை கிராம குழந்தை இறந்ததற்கு வெட்கப்பட வேண்டும்!

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை:

திருச்சி, தர்மபுரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை, தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. 'நீட்' தேர்வு முடிந்து சேர்க்கை நடக்கும் நிலையில், அங்கீகாரம் ரத்தாகும் அளவுக்கு மாநில அரசு, மாணவர்களை வஞ்சித்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாயில், கடலுக்குள் பேனா வைக்க முயலும் அரசு, மாணவர்கள் பயிலும் கல்லுாரிக்கான வசதியை செய்யாதது கேள்விக்குறியாக உள்ளது.

பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியின் மருத்துவக் கல்லுாரி அங்கீகாரத்தையும் ரத்து செய்திருப்பதால், தமிழகத்தை பழிவாங்க தான், மத்திய அரசு இப்படி செஞ்சிடுச்சுன்னு சாக்கு போக்கும் சொல்ல முடியாதே!

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:

நாடு சுதந்திரம் அடைந்து, ௭௫ ஆண்டுகள் ஆன நிலையிலும், கிராம நத்தத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் மக்கள், பட்டா வேண்டி போராட வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது. மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாமல்லபுரம் மக்களின் நீண்ட நாள் பட்டா வழங்கும் கோரிக்கையை ஏற்று, பட்டா வழங்க வேண்டும்.

மக்கள் போராடினா பட்டா தர மாட்டாங்க... வேணும்னா இவர் தன்னோட பழைய, 'மக்கள் நல கூட்டணி' நண்பர்களை வச்சு போராடி பார்க்கலாமே!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி: தேனி மாவட்டம் கம்பத்தில், ஊருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானையை, மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில், வனத்துறை

மூலக்கதை