பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஒரு வாரம்... நீட்டிப்பு; மாலை நேர சிற்றுண்டி வழங்க ஏற்பாடு

தினமலர்  தினமலர்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஒரு வாரம்... நீட்டிப்பு; மாலை நேர சிற்றுண்டி வழங்க ஏற்பாடு

புதுச்சேரி: புதுச்சேரியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடை விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டு, பள்ளிகள் வரும் 7ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளி முழு ஆண்டு தேர்வு முன் கூட்டி நடத்தி முடித்து ஏப்ரல் 20ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது, ஜூன் 1ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் வெயில் தாக்கம் காரணமாக கோடை விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனையேற்று, புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது;

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் வரும் 7ம் தேதி திறக்கப்படும்.

அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்ற சில விதிமுறைகளை தளர்த்தி அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று 127 அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்ற அனுமதி கிடைத்துள்ளது. சி.பி.எஸ்.இ., பாட திட்டம் புத்தகங்கள் கொள்முதல் செய்து, மாகி, ஏனாம், காரைக்காலுக்கு அனுப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ஒரு பகுதி புத்தகம் வந்துள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் புத்தகம் வழங்கப்படும்.

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் தமிழ் விருப்ப பாடமாக இருக்கும். தொடர்ந்து தமிழ்நாடு மாநில பாட திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். நாராயணசாமி முதல்வராக இருந்தபோது, 1 முதல் 6ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடதிட்டம் கொண்டு வந்தார். அப்போது சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் தமிழ் விருப்ப பாடம் என்பது அவருக்கு தெரியாதா? பொய் குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கத்துடன் கூறி வருகிறார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படிக்க விரும்புகின்றனர். அகில இந்திய நுழைவு தேர்வுகளான நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அவசியமாகிறது. அதனால் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடதிட்டம் கொண்டு வரப் படுகிறது.

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தை போதிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். புதிய பாட திட்டத்திற்கு மாறும் போது சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்காக புதிய பாட திட்டத்திற்கு மாறாமல் இருக்க முடியாது.

ஆசிரியர்கள் இடமாற்ற கொள்கை



அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய இடமாற்ற கொள்கை குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் 2 கட்ட பேச்சுவார்தை நடத்தினோம். ஒரு தரப்பினர் புள்ளிகள் முறையும், மற்றொரு தரப்பினர் ஜீரோ கவுன்சிலிங் முறையை பின்பற்ற வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து ஆலோசித்து இடமாற்றல் கொள்கை முடிவு செய்யப்படும். பள்ளி திறக்கும் முன் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர்.

ஆசிரியர் தேர்வு



ஆரம்ப பள்ளிக்கு 146 ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளோம். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதா? நுழைவு தேர்வு நடத்தி தேர்வு செய்வதா? என கொள்கை முடிவு எடுக்க அமைச்சரவையின் முடிவுக்கு கோப்பு அனுப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுக்கு பிறகு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர், மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மதிய உணவு வழங்கும் நிறுவனத்துடன் குறிப்பிட்ட சில ஆண்டிற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுத்துவதால் சட்ட சிக்கல் வருமா என ஆலோசித்து வருகிறோம்.

மாலை சிற்றுண்டி திட்டம்



மாணவர்களுக்கு முட்டை, சிறுதானியம் உணவு வழங்க அரசு டெண்டர் விட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு மாலையில் சிறு தானிய சிற்றுண்டி வழங்கப்படும். காலை நேரத்தில் பால் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் காலை நேர உணவு திட்டம் புதுச்சேரிக்கு தேவையில்லை.

அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு (தற்போது 9ம் வகுப்பு பயில்வோர்) கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். கலை அறிவியல் கல்லுாரிகளில் கவுன்சிலிங் விரைவில் துவங்கும்.

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்திற்கு அரசு பள்ளிகள் மாறினாலும், சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது. சீருடை தையல் கூலியை இந்தாண்டு உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

பேட்டியின் போது, கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி உடனிருந்தனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடை விடுமுறை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டு, பள்ளிகள் வரும் 7ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம்

மூலக்கதை