திறமைசாலிகள் அதிகம் உள்ள தமிழகம்: ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தினமலர்  தினமலர்
திறமைசாலிகள் அதிகம் உள்ள தமிழகம்: ஜப்பானில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ‛நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், அதனை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றும் பேசினார்.

சென்னையில் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கிலும், முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்து தற்போது ஜப்பானில் உள்ள ஸ்டாலின், இன்று (மே 29) டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது ஜப்பான் நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இம்மாநாட்டில் சுமார் 200 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இயற்கை நெருக்கடியாக இருந்தாலும், செயற்கை நெருக்கடிகளாக இருந்தாலும் அதனை வென்று காட்டுபவர்கள் ஜப்பானியர்கள். சிங்கப்பூர், ஜப்பானில் பார்க்கும் நிறுவனங்களின் அதிபர்கள், தலைவர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் முகத்தில் நான் பார்க்கும் உற்சாகம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது. இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் இரண்டு பெரிய மற்றும் பழம்பெரும் ஜனநாயக நாடுகள். ஜப்பானின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகம் பெறும் நாடு இந்தியாதான்.

இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள், சமீப காலங்களில் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள், தமிழகம்தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. புதிய தொழில் பூங்காக்களை நாங்கள் அமைத்து வருகிறோம். அதிலும் உங்களது மேலான முதலீடுகளை வரவேற்கிறோம். உங்களது தொழிற்சாலைகளை, எங்கள் மாநிலத்தில் அமைக்கும்போது அதுதொடர்பான தலைமை அலுவலகத்தையும் எங்கள் மாநிலத்திலேயே அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நிர்வாக உதவி - மனித ஆற்றல்

தமிழகத்தின் இளைய சக்தியை வளமிக்கதாக நாங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறோம். 'நான் முதல்வன்' என்ற எனது கனவுத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள் அனைவரையும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல்துறை வல்லுநர்களாக வளர்த்து வருகிறோம். பெண்களை தொழில்நுட்ப வல்லுநர்களாக உயர்த்தி வருகிறோம். எனவே, உங்களது நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழக அரசும், திறந்த மனத்தோடு அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் அரசாக இருக்கிறது. நிர்வாக உதவி - மனித ஆற்றல் ஆகிய இரண்டும் இணைந்து கிடைக்கும் மாநிலமாக இருக்கும் தமிழகத்தை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ‛நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், அதனை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்தி

மூலக்கதை