கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியதால் ராகுல்... சுறுசுறுப்பு!

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியதால் ராகுல்... சுறுசுறுப்பு!

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி வாகை சூடியதால்,சுறுசுறுப்பு அடைந்துள்ள அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபடத் துவங்கியுள்ளார். அமெரிக்கா செல்லும் அவர், கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்காக முடுக்கி விட்டு, பயணம் முடித்து புதுடில்லி திரும்பியதும், மீண்டும் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி தன் அடுத்த இலக்காக, ம.பி., - ராஜஸ்தானை நோக்கி வைத்துள்ளது.

இந்தாண்டு இறுதியில், ம.பி., - ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இதில், ம.பி.,யில் பா.ஜ.,வும், ராஜஸ்தானில் காங்கிரசும் ஆட்சியில் உள்ளன. ராஜஸ்தானில் பல முறை சமாதானப்படுத்தியும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து மோதல் நடப்பதால், காங்., மேலிடத்திற்கு தலைவலிஏற்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

ம.பி., - ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பணிகள்குறித்து, தலைநகர் புதுடில்லியில், காங்., தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ராகுல், ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத், மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் மற்றும் ம.பி., மேலிடப் பொறுப்பாளர் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடகாவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது போல், ம.பி., - ராஜஸ்தானிலும் அதே பாணியை பின்பற்றுவது குறித்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

மேலும், தேசிய அளவிலான பிரச்னைகளை முற்றிலும் தவிர்த்து, மாநில அளவிலான மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தி, தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் கோஷ்டிபூசல்களை ஒதுக்கி வைத்து, அங்கு தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் போல், ம.பி.,யிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை வழங்குவது குறித்துவிவாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு பின், ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது:

ம.பி., சட்டசபை தேர்தல் குறித்து, விரிவாக ஆலோசனை நடத்தினோம். அம்மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர், பல்வேறு முக்கிய தகவல்களை தெரிவித்தனர். இதன் அடிப்படையில், தேர்தல்குறித்த வியூகங்களை காங்., மேலிடம் வகுக்கும்.

கணிப்பு

கர்நாடகாவில், நாங்கள் கணித்தது போல, 135 இடங்களில் வெற்றி பெற்றோம். அதே போல், ம.பி.,யிலும், 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என, கணித்துள்ளோம். கர்நாடகாவில் வெற்றி பெற்றது போல், ம.பி.,யிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரம், ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டையும், அவருக்கு எதிராக செயல்படும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டையும் தனித் தனியாக அழைத்து பேசி, மோதலை தீர்க்க முடிவு செய்துள்ளார் ராகுல். அமெரிக்கா சென்று திரும்பியதும், அதற்கான முயற்சியில் ராகுல் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

ம.பி., மாநிலம் போபாலில், காங்., வெற்றி கணக்கு குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், அம்மாநில முதல்வருமான சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று கூறியதாவது:இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள தேர்தலில், பா.ஜ., அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது; அது நிச்சயம்பலிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.



நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி வாகை சூடியதால்,சுறுசுறுப்பு அடைந்துள்ள அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள மத்திய பிரதேசம்,

மூலக்கதை