ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவியேற்பு

தினமலர்  தினமலர்
ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை,-சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, எஸ்.வி.கங்கா பூர்வாலா நேற்று பதவியேற்றார். அவருக்கு, தமிழக கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜா, இம்மாதம் 24ல் ஓய்வு பெற்றார். அன்றே, மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அடுத்த இரண்டே நாளில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த, எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி உத்தரவிட்டார்.

புதிய தலைமை நீதிபதி கங்கா பூர்வாலாவுக்கு, நேற்று கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதி பிறப்பித்த நியமன உத்தரவை, தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு வாசித்தார். அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின், கவர்னர் மற்றும் மூத்த நீதிபதி வைத்தியநாதன் ஆகியோர், தலைமை நீதிபதிக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்; உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்; கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சிவஞானம்; சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்களும், டி.ஜி.பி., சைலேந்திரபாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தலைமை நீதிபதிக்கு, திருக்குறள் நுாலை அமைச்சர் உதயநிதி வழங்கினார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பெஞ்சமின் ஆகியோரும் பங்கேற்றனர்.

தலைமை நீதிபதிக்கு சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும், அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கங்கா பூர்வாலா, 1962 மே 24ல் பிறந்தார். வழக்கறிஞராக, 1985ல் பணியை துவங்கினார். மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக, 2010 மார்ச் 13ல் நியமிக்கப்பட்டார். 2022 டிசம்பர் முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவி வகித்து வந்தார்.

தலைமை நீதிபதி பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை, 64 ஆக உயர்ந்துள்ளது; 11 இடங்கள் காலியாக உள்ளன. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75.

மத்திய சட்ட அமைச்சராக இம்மாதம் 18ல் அர்ஜுன்ராம் மெகால் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற மறுநாள், மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்த நால்வர், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, இம்மாதம் 23ம் தேதி நால்வரும் பதவியேற்றனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலாவையும், ராஜஸ்தான், கேரளா, ஹிமாச்சல உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளையும் நியமித்து, ஒரே நாளில் இம்மாதம் 26ல் அறிவிப்பு வெளியானது.உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு, தற்போது விரைவில் செயல்வடிவம் கிடைத்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்யப்பட்டோருக்கும் நியமன அறிவிப்பு விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு, வழக்கறிஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



சென்னை,-சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, எஸ்.வி.கங்கா பூர்வாலா நேற்று பதவியேற்றார். அவருக்கு, தமிழக கவர்னர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற

மூலக்கதை