பார்லிமென்ட் திறப்பை எதிர்க்கும் கட்சியினருக்கு கண்டனம்!

தினமலர்  தினமலர்
பார்லிமென்ட் திறப்பை எதிர்க்கும் கட்சியினருக்கு கண்டனம்!

புதுடில்லி : பார்லிமென்ட் புதிய கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட, 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதற்கு, மூத்த அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முன்னாள் துாதர்கள், கல்வியாளர்கள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். 'ஜனநாயகத்தின் ஆன்மாவை உறிஞ்சும் வகையில் எதிர்க்கட்சிகள்செயல்படுகின்றன' என, அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தலைநகர் புதுடில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.

இந்த கட்டடம், 1927ல் திறக்கப்பட்டது. நுாற்றாண்டை நெருங்கிவிட்ட இந்த கட்டடம் வலுவிழந்துள்ளது; இடப் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதையடுத்து, புதிய பார்லிமென்ட் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

பழைய கட்டடம் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே, புதிய பார்லிமென்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த 2020 டிசம்பரில் பூமி பூஜை போடப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, நாளை புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட, 19 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'பார்லிமென்டின் தலைவராக உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு தான், புதிய பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும்' என, அந்த கட்சிகள்வலியுறுத்தின.

திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாகவும் அவை அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு, நாடு முழுதும் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

இரட்டை வேடம்இது குறித்து முன்னாள் பிரதமரும், மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான தேவ கவுடா கூறியுள்ளதாவது:

பா.ஜ.,வை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள, என்னிடம் பல காரணங்கள் உள்ளன. ஆனால், பார்லிமென்ட் விஷயத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை.

ஒரு முன்னாள் பிரதமராகவும், குடிமகனாகவும் விழாவில் பங்கேற்பேன். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது, சரியான நடவடிக்கை அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

தேவ கவுடாவின் மகனும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று கூறியதாவது:

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவுக்கு, பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்கவில்லை என எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். முர்மு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, காங்கிரஸ் ஏன், யஷ்வந்த் சின்ஹாவை அவருக்கு எதிராக களம் இறக்கியது?

அவரை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை? காங்கிரஸ் இரட்டை வேடம் போட்டு, மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது.

அழைப்பு விடுக்கவில்லை?இதற்கு முன், சத்தீஸ்கர் சட்டசபை கட்டடத்தை திறந்தது சோனியாவும், ராகுலும் தான். அப்போது, ஏன் அம்மாநில கவர்னருக்கு அழைப்பு விடுக்கவில்லை?

கர்நாடகாவில் விகாஸ் சவுதா எனப்படும் அரசு அலுவலகங்கள் உள்ள கட்டட திறப்பின் போதும், அப்போதைய காங்கிரஸ் அரசு, கவர்னரை அழைக்கவில்லை.

தற்போது பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழாவில் மட்டும் ஏன் அரசியல் செய்கின்றனர்? காங்கிரஸ் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு நாங்கள் அவர்களது அடிமைகள் அல்ல!

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறியதாவது:கட்சிகளுக்கு, ஜனநாயகத்தின் மீது எந்த ஈடுபாடும் இல்லை. அவர்களது ஒரே நோக்கம், மன்னராட்சி நடைமுறைக்கு ஆதரவாக செயல்படுவது தான். அவர்களது மன்னராட்சி சித்தாந்தம், நம் அரசியலமைப்பின் ஜனநாயக கொள்கைகளுடன் முரண்படுகிறது. நம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களை அவமதிப்பது தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், வெளிநாடுகளில் துாதர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட, 270 பேர், எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய பார்லிமென்ட் திறப்பு விழா, நம் நாட்டிற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கக்கூடிய தருணம். ஆனால், ஒன்றுக்கும் உதவாத வாதங்களுடன், முதிர்ச்சியற்ற, வெற்று காரணங்களை கூறி, எதிர்க்கட்சிகள் இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை ஜனநாயகமற்ற ஒரு செயல்; இது, ஒரு விசித்திரமான நடவடிக்கை. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட நம் பிரதமர், பல கோடி இந்தியர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். நம்பகத்தன்மை, தொலைநோக்கு பார்வை, பணிகளை செய்து முடிக்கும் உறுதி, நாட்டுக்காக உழைக்கும் குணம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்; இதை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரும்பவில்லை.

தற்போதைய அரசியலில், நாடு தான் பெரிது என கருதும் கட்சிகளும், குடும்பம் தான் பெரிது என கருதும் கட்சிகளும் உள்ளன. நாட்டுக்காக பாடுபடும் கட்சிகளை, குடும்பத்துக்காக பாடுபடும் கட்சிகளால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?

குடும்பம் தான் பெரிது என நினைக்கும் கட்சிகள், பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. இதன் வாயிலாக, ஜனநாயகத்தின் ஆன்மாவை இவர்கள் எப்படி உறிஞ்சுகின்றனர் என புரிந்து கொள்ள முடியும்.

இது போன்ற கட்சிகள், தங்களுக்கென ஜனநாயகமற்ற ஒரு தனி இலக்கணத்தை வகுத்து, அதை பின்பற்றுகின்றன. இதற்கு முன் பார்லிமென்ட் அலுவல்கள் நடக்கும்போது, எந்தவித அடிப்படையும் இன்றி, அலுவல்களை புறக்கணிப்பதை இவர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்திய குடிமகன்கள் என்ற முறையில், எதிர்க்கட்சிகளின் இந்த ஜனநாயக விரோதமான நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த விஷயத்தில் தேசத்துக்கும், பிரதமர் மோடிக்கும் எப்போதும் ஆதரவாக இருப்போம் என உறுதி எடுக்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களில், என்.ஐ.ஏ., முன்னாள் இயக்குனர் யோகேஷ் சந்தர் மோடி, முன்னாள் டி.ஜி.பி.,க்கள் எஸ்.பி.வைத், பி.எல்.வோரா, முன்னாள் துாதர்கள் பஸ்வதி முகர்ஜி, நிரஞ்சனா தேசாய், வீரேந்திர குப்தா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கோபால் கிருஷ்ணா, தீபக் சின்கால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதற்கு, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:காங்கிரஸ் கட்சியினர் இப்போது மேலும் ஒரு வெட்கக்கேடான விஷயத்தை செய்துள்ளனர். திருவாவடுதுறை ஆதீனம் என்பது ஒரு புனிதமான சைவ மடம். நாடு சுதந்திரம் அடைந்தபோது, செங்கோலுக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து அந்த மடம் தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியினரோ, திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை போலி என்கின்றனர். நம் நாட்டின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் காங்கிரஸ் ஏன் இவ்வளவு அதிகமாக வெறுக்கிறது என தெரியவில்லை. நாடு சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில், தமிழகத்தின் புனிதமான சைவ மடத்தின் சார்பில், ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த செங்கோலை, ஒரு ஊன்றுகோல் போல் அருங்காட்சியகத்தில் போட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியினர் தங்களின் செயல்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதீனகர்த்தர் விளக்கம்!சென்னை அரும்பாக்கத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் கிளை மடத்தில், ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் நேற்று அளித்த பேட்டி: சைவ சமயத்தில் நந்தி என்பது, தர்மத்தின் அடையாளம். தர்மம் அழிந்தால் உலகம் அழியும். அதனால், தர்மத்தை அரசன் காக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த, செங்கோலில் நந்தி வைக்கிறோம். நாடு சுதந்திரம் அடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீனத்தை ராஜாஜி தொடர்பு கொண்டு, 'முறைப்படி செங்கோல் வழங்க வேண்டும்' எனக் கேட்டார்.இதன்படி, சென்னை உம்மிடி பங்காரு நகைக் கடையில், 5 அடி உயரத்தில் தங்க முலாம் பூசிய செங்கோல் செய்யப்பட்டு, 1947 ஆகஸ்ட் 14ம் தேதி இரவு 11:45 மணிக்கு மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டது.அவரிடம் இருந்து செங்கோலை வாங்கி ஊர்வலமாக எடுத்துச் சென்று, அன்றைய பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில், ஆதீனத்தின் சார்பில், குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர். ஆதீனம் வெளியிட்டுள்ள பல நுால்களில், செங்கோல் வழங்கிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது; இதற்கான ஆதாரங்களும் உள்ளன. தமிழகத்தில் அதுவும் சோழ நாட்டில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து, பிரதமருக்கு செங்கோல் வழங்கிய சம்பவம் அனைவரும் பெருமை கொள்ளத்தக்க நிகழ்ச்சி. ஆனால், இன்று சிலர், நேருவிடம் செங்கோல் வழங்கப்படவில்லை என, சர்ச்சைக்குரிய தகவல்களைக் கூறி வருவது வருந்தத்தக்கது. சோழர்கள் நடத்திய ஆட்சி முறைப்படி தான் செங்கோலை உருவாக்கி, நேருவிடம் கொடுத்தோம். 'கோல் உயர கோன் உயரும்' என, அவ்வையாரும் கூறியுள்ளார். 'சமன் செய்து சீர்துாக்கும் கோல்போல்' என, வள்ளுவரும் கூறியுள்ளார். கடந்த 75 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட செங்கோலை புதுப்பித்து, மீண்டும் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளோம். பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கை அருகில், அந்த செங்கோல் வைக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது, மகிழ்ச்சி தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியரையும் பெருமைப்படுத்தும்''புதிய பார்லி., கட்டடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லி., குறித்த 'வீடியோ'வை, தன் சமூக வலைதளமான 'டுவிட்டரில்' அவர் வெளியிட்டு கூறியுள்ளதாவது:புதிய பார்லி., கட்டடம், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும். மிகச்சிறந்த அடையாளமாக திகழும், இந்த கட்டடத்தின் முழுப் பார்வையை இந்தக் காணொளி வழங்குகிறது. --இந்த வீடியோவை, உங்களின் எண்ணங்களுடன் சொந்த குரலில் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு வெளியிடப்படும் பதிவுகளில் சிலவற்றை நான் மீண்டும் பதிவிடுவேன். வீடியோவை பதிவிடும் போது, #MyParliamentMyPride என குறிப்பிட மறக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பார்லி.,யின் அழகை வெளிப்படுத்தும் 1:48 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், கட்டடத்தின் அழகு, லோக்சபா, ராஜ்யசபாவின் முழுத் தோற்றம், மண்டபத்தின் சிறப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கழுகுப் பார்வையில், பார்லி.,யின் முகப்பு தோற்றத்துடன் துவங்கும் வீடியோவில், நான்கு சிங்கங்களுடன் அமைந்த சின்னத்தின் கம்பீரம், அசோக சக்கரத்தின் அழகு, அங்குள்ள தோட்டம் என முழு வளாகமும் கண்முன்னே விரிந்து, பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது.

புதுடில்லி : பார்லிமென்ட் புதிய கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட, 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதற்கு, மூத்த அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,

மூலக்கதை