விக்ராந்த் கப்பலில் இறங்கியது போர் விமானம் வரலாற்று சாதனை! : முதல் முறையாக இரவில் நிகழ்ந்த சாகசம்

தினமலர்  தினமலர்
விக்ராந்த் கப்பலில் இறங்கியது போர் விமானம் வரலாற்று சாதனை! : முதல் முறையாக இரவில் நிகழ்ந்த சாகசம்

புதுடில்லி:நம் கடற்படைக்கு சொந்தமான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிக பிரமாண்ட, ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், 'மிக் 29கே' ரக போர் விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கி, நம் கடற்படையினரும், பைலட்களும் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

ராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், நம் கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற மிக பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்., மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.

மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.

இதில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்த முடியும்.

இந்த விமானம் தாங்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது, 'இது ஒரு மிதக்கும் நகரம்' என, பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இந்த வரிசையில், ரஷ்ய தயாரிப்பான, மிக் 29கே போர் விமானம் மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை, ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் நம் வீரர்கள் கடந்த பிப்., மாதம் தரை இறக்கினர். ஆனால், இந்த பயிற்சி பகலில் நடத்தப்பட்டது.

இது போன்ற போர் விமானங்களை இரவு நேரங்களில் தரையிறக்கச் செய்வது மிக கடினமான பணியாக கருதப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் போர் விமானங்கள் கப்பலில் இதுவரை தரை இறக்கப்பட்டது இல்லை.

இந்நிலையில், விக்ராந்த் கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானத்தை பைலட்கள் முதல்முறையாக நேற்று முன்தினம் தரை இறக்கினர்.

இது குறித்து, கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ''இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானத்தை முதல்முறையாக விக்ராந்த் கப்பலில் தரை இறக்கி நம் வீரர்கள் வரலாற்று சாதனை படைத்து உள்ளனர்,'' என்றார்.

இந்த பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கு, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:

இந்த சாதனையை படைத்த கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகள். இந்த குறிப்பிடத்தக்க சாதனை, விக்ராந்த் குழுவினர் மற்றும் கடற்படை விமானிகளின் திறமை, விடாமுயற்சி மற்றும் தொழில் நேர்த்திக்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:எல்லைகளில் இரட்டிப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நம் தேசத்திற்கு ராணுவத்தில் பல நவீன தொழில்நுட்பங்கள் வேண்டும். இது, ஆராய்ச்சியால் மட்டுமே சாத்தியமாகும். இன்று நாம் உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றாக இருக்கிறோம், நம் ராணுவத்தின் வீரம் உலகம் முழுதும் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் நலன்களைப் பாதுகாக்க, தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட ராணுவத்தை வைத்திருப்பது அவசியமாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.புதுடில்லி:நம் கடற்படைக்கு சொந்தமான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிக பிரமாண்ட, ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், 'மிக் 29கே' ரக போர் விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில்

மூலக்கதை