'டாஸ்மாக்'கை இழுத்து மூடிட்டா, எல்லா பிரச்னைகளும் பட்டுன்னு முடிஞ்சிடும்!

தினமலர்  தினமலர்
டாஸ்மாக்கை இழுத்து மூடிட்டா, எல்லா பிரச்னைகளும் பட்டுன்னு முடிஞ்சிடும்!

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மதுக் கடைகள், பார், மனமகிழ் மன்றங்கள், ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகின்றனவா என்பதை, கலால் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தை, வாரந்தோறும் கலெக்டர் தலைமையில் நடத்த வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

டவுட் தனபாலு: மது அருந்திட்டு வாகனம் ஓட்டுனா மட்டும் தான் தீமை ஏற்படுமா... குடிச்சிட்டு வீட்டுக்குள் படுத்து கிடந்தா மட்டும், எந்த பாதிப்பும் ஏற்படாதா... அதிகாரிகளுக்கு இப்படி அடுக்கடுக்கா உத்தரவு போடுறதுக்கு பதிலா, ஒரே உத்தரவுல, 'டாஸ்மாக்'கை இழுத்து மூடிட்டா, எல்லா பிரச்னைகளும் பட்டுன்னு முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

***

பத்திரிகை செய்தி: 'வங்கிகளில் கடந்த, 23 முதல், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனாலும், எதிர்பார்த்த அளவில் வாடிக்கையாளர்கள் கூட்டம் இல்லை; இதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி கவுன்டர்கள் காற்று வாங்கின.

டவுட் தனபாலு: அது சரி... அன்றாடங்காய்ச்சிகளிடமும், நடுத்தர மக்களிடமும், 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை... அரசியல்வாதிகள், பெரிய தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர் தான் கட்டு கட்டா வச்சிருப்பாங்க... இனிமே தான், சாதாரண மக்கள் கையில குடுத்து அவங்க பணத்தை மாத்துவாங்க... அதனால, போக போக, வங்கிகளில் கூட்டம் கும்மியடிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

***

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: அமைச்சர் தியாகராஜன், 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து பேசிய ஆடியோ, 'லீக்' ஆனதும், முதல்வரின் மருமகனும், மகனும் பதறி, லண்டன் சென்று வந்தனர். தொடர்ந்து முதல்வரும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடை ஈர்க்கப் போகிறாரா அல்லது முதலீடு செய்யப் போகிறாரா என, தமிழக மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டவுட் தனபாலு: உங்க ஆட்சியில, நீங்களும் கூடத்தான், கோட் சூட் எல்லாம் போட்டு, வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தீங்க... அதனால, தமிழகத்துக்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்தன, எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைச்சது என்ற, 'டவுட்'களுக்கு விளக்கம் தந்துட்டு, முதல்வரின் பயணம் பற்றி கேள்வி கேட்டால் என்ன?

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மதுக் கடைகள், பார், மனமகிழ் மன்றங்கள், ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகின்றனவா

மூலக்கதை