நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் வண்ணமயமாக கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் இன்று இரவு கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற உள்ளூர் டி20 போட்டித் தொடராக முத்திரை பதித்துள்ள இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 16வது சீசன், இன்று தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடக்க உள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் கொடுத்துள்ளது. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 10 அணிகள் களமிறங்குகின்றன. ஏ பிரிவில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும், பி பிரிவில் சென்னை, ஐதராபாத், குஜராத், ஆர்சிபி, பஞ்சாம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை, எதிர் பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா 2 முறை என லீக் சுற்று ஆட்டங்கள் உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் நடத்தப்படுகிறது.மொத்தம் 12 மைதானங்களில் 70 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கவுகாத்தி பரஸபாரா ஸ்டேடியத்தில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சில உள்ளூர் ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடத்தப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் பிளே ஆப் சுற்றும், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியும் நடக்க உள்ளன. தொடக்க லீக் ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றக்கூடிய ‘துருப்புச்சீட்டு’ வீரர், நோ பால், வைடுகளுக்கு டிஆர்எஸ் உள்பட பல்வேறு சுவாரசியமான விதிமுறைகள் 16வது சீசனில் அறிமுகமாகின்றன. டாஸ் போட்ட பிறகு, தங்கள் அணியில் களமிறங்கும் 11 வீரர்களை அறிவிக்கும் உரிமையும் கேப்டன்களுக்கு வழங்கப்படுகிறது. நட்சத்திர வீரர்கள் பும்ரா, பன்ட், ஷ்ரேயாஸ் உள்பட பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி மோதுகிறது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டி, ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தத்தில் 2 மாத கால ஐபிஎல் திருவிழா, உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போட காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.* குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஸ்ரீகர் பரத் (கீப்பர்), அல்ஜாரி ஜோசப், ஜோஷ் லிட்டில், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, நூர் அகமது, உர்வில் படேல், ரஷித் கான், விருத்திமான் சாஹா, சாய் கிஷோர், சாய் சுதர்ஷன், பிரதீப் சங்வான், விஜய் ஷங்கர், மோகித் ஷர்மா, ஷிவம் மாவி, ஷுப்மன் கில், ஓடியன் ஸ்மித், ராகுல் திவாதியா, மேத்யூ வேடு, கேன் வில்லியம்சன், ஜெயந்த் யாதவ், யஷ் தயாள்.* சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), மொயீன் அலி, பகத் வர்மா, தீபக் சாஹர், டிவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெயிக்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, சிசந்தா மகலா, அஜய் மண்டல், மதீஷா பதிரணா, டுவைன் பிரிடோரியஸ், அஜிங்க்யா ரகானே, ஷேக் ரஷீத், அம்பாதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, பென் ஸ்டோக்ஸ், மஹீஷ் தீக்‌ஷனா.

மூலக்கதை