அகமதாபாத்தில் தமன்னா, ராஷ்மிகாவின் நடன நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்: முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்துடன் சிஎஸ்கே மோதல்

தினகரன்  தினகரன்
அகமதாபாத்தில் தமன்னா, ராஷ்மிகாவின் நடன நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்: முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்துடன் சிஎஸ்கே மோதல்

அகமதாபாத்: பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் ஐபிஎல் டி.20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 16வது சீசன் ஐபிஎல் திருவிழா நாளை தொடங்குகிறது. இதில் 10 அணிகள் களம் இறங்குகின்றன. 2 ஆண்டுகளுக்கு பின்னர் அணிகளின் சொந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் உள்ளூரில் 7 , எதிரணியின்  மைதானங்களில் 7 என 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். வழக்கம்போல் கடந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஹர்திக் பாண்டியா  தலைமையிலான குஜராத் முதல் போட்டியில் களமிறங்க உள்ளது. 4 முறை  சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, தொடக்க போட்டியில்  குஜராத் எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. மே 21ம் தேதி வரை 52 நாட்களில் 12 மைதானங்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள்   நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மாலை 3.30 மற்றும் இரவு 7.30 மணி என 2 போட்டிகள் நடைபெற உள்ளது. கடைசி லீக் போட்டியில் குஜராத் அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. பின்னர் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்,  முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடும். 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த  அணிகள் முதல் எலிமினேட்டர் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும்  அணி, முதல் குவாலிபயரில் தோல்வியுற்ற அணியுடன்2வது எலிமினேட்டர்  போட்டியில் மோதும். அதைதொடர்ந்து மே 28ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு அணியும் புதிதாக சில வீரர்களுடன் களம் இறங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார். கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதுகு வலி காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளதால் நிதிஷ் ரானா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்ஆப்ரிக்காவின் மார்க்ரம் செயல்பட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதால் டேவிட் வார்னர் தலைமையில் அந்த அணி களம் இறங்குகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார். மும்பை அணியில் பும்ரா இல்லாதது பின்னடைவாக இருந்தாலும் சோப்ரா ஆர்ச்சர் அதனை ஈடு செய்ய உள்ளார். டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி, கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ உள்ளிட்ட அணிகள் பெரிய மாற்றங்கள் இன்றி களம் காண்கின்றன. ஐபிஎல் தொடரில் பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்கள் அனைவரும் இந்த முறை முழுமையாக பங்கேற்க உள்ளனர். தென்ஆப்ரிக்கா சொந்த மண்ணில் நெதர்லாந்துடன் 2 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற இந்த 2 போட்டியிலும் வெற்றி முக்கியம் என்பதால் அந்நாட்டு வீரர்கள் மட்டும் ஐபிஎல்லில் தங்கள் அணிகளின் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இதேபோல் இலங்கை அணியினரும் நியூசிலாந்து தொடரில் ஆடுவதால் சில போட்டிகளை தவற விடுகின்றனர்.  2 ஆண்டுக்கு பின்னர் ஐபிஎல்லில் பிரமாண்ட தொடக்க விழா நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு தொடங்கி 45 நிமிடங்கள் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. பாடகர் அரிஜித் சிங், நடிகை தமன்னா பாட்டியா நடன  நிகழ்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்களை தவிர ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், டைகர் ஷெராஃப்உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். சிறப்பு லேசர் ஷோ நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் சிஎஸ்கே கேப்டன் டோனி,  குஜராத் கேப்டன் ஹர்திக் மட்டும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக இன்று மாலை  10 அணிகளின் கேப்டன்களின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் கோப்பை அறிமுக  நிகழ்ச்சி நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா வெப் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மூலக்கதை