மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இந்தியாவுக்கு 2 தங்கம்

தினகரன்  தினகரன்
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இந்தியாவுக்கு 2 தங்கம்

புதுடெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனைகள் நீத்து கங்காஸ், சவீத்தி போரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். டெல்லியில் நடந்து வரும் இப்போட்டித் தொடரின் 48 கிலோ எடை பிரிவு பைனலில் மங்கோலியாவின் லுத்சைகான் அல்டான்செட்செக்குடன் நேற்று மோதிய நீத்து கங்காஸ் (22 வயது), அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். அவரது ஆக்ரோஷமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் லுத்சைகான் திணறிய நிலையில், 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்ற நீத்து உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். அரியானா மாநிலம் பிவாண்டியை சேர்ந்த நீத்து ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதே தொடரின் மகளிர் 81 கிலோ எடை பிரிவு பைனலில் சீனாவின் வாங் லினாவுடன் மோதிய சவீத்தி 4-3 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்கு இதுவரை 12 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இவற்றில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 6 தங்கம் வென்றுள்ளார் (2002, 2005, 2006, 2008, 2010 மற்றும் 2018). சரிதா தேவி (2006), ஆர்.எல்.ஜென்னி (2006), கே.சி.லேகா (2006), நிக்கத் ஜரீன் (2022) ஆகியோரும் இந்தியாவுக்காக உலக கோப்பை பாக்சிங்கில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

மூலக்கதை