நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய்

தினமலர்  தினமலர்
நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய்

எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் கொடூர வில்லனாக மிரட்டியவர் நடிகர் பாபு ஆண்டனி. குறிப்பாக பூவிழி வாசலிலே, சூரியன் ஆகிய படங்களின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். ஆனால் கடந்த பத்து வருடங்களாக பெரும்பாலும் குணச்சித்திர நடிகராக தான் நடித்து வருகிறார் பாபு ஆண்டனி. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்கா முட்டை ஆகிய படங்களில் இவரது நடிப்பு பாராட்டு பெற்றது.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவரும் நடிக்கிறார். கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த லியோ படத்தின் படப்பிடிப்பில் இவரும் கலந்து கொண்டு நடித்து வந்தார். தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு முடிவடைந்து அனைவரும் சென்னை திரும்பி உள்ள நிலையில் விஜய் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார் பாபு ஆண்டனி.

விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது, “விஜய் ரொம்பவே அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொண்டார். அவர் நான் நடித்த பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை பார்த்திருக்கிறேன் என்றும் என்னுடைய ரசிகன் என்றும் கூறியபோது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. அவரைப் போன்ற ஒரு நபரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்பது சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இதையே தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவில் இருந்த பலரும் என்னிடம் கூறினார்கள். மிகப்பெரிய ஆசீர்வாதங்கள் இவை. இத்தனைக்கும் விஜய்யையும் மற்றவர்களையும் இப்போதுதான் நான் முதன்முறையாக பார்க்கிறேன்” என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளார் பாபு ஆண்டனி.

மூலக்கதை