மகளிர் பிரிமியர் லீக் டி20: முதல் சாம்பியன் யார்

தினகரன்  தினகரன்
மகளிர் பிரிமியர் லீக் டி20: முதல் சாம்பியன் யார்

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் முதல் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.முதலாவது டபுள்யு.பி.எல் தொடர் மும்பையில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை மோதியதில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றது. 4வது மற்றும் 5வது இடங்களைப் பிடித்த ஆர்சிபி, குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதின.நவி மும்பை, டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த அந்த போட்டியில், 72 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், டபுள்யு.பி.எல் தொடரின் முதலாவது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.மும்பை, பிராபோர்ன் அரங்கில் இரவு 7.30க்கு தொடங்கும் இப்போட்டியில், மெக் லான்னிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது. லீக் சுற்றில் அந்த அணி விளையாடிய 8 போட்டியில் 6 வெற்றி 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. மும்பை அணியும் 12 புள்ளிகள் பெற்ற நிலையில், ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நடப்பு தொடரில் இந்த அணிகள் ஏற்கனவே மோதிய 2 போட்டியில், மும்பை 8 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லி 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று சமபலத்துடன் இருப்பதை நிரூபித்துள்ளன.எலிமினேட்டர் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணியை பந்தாடியதால், மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகளின் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக 5 லீக் ஆட்டங்களில் வென்ற அந்த அணி, இடையில் ஏற்பட்ட சரிவை சமாளித்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ஸைவர் பிரன்ட் ஆட்டமிழக்காமல் 72 ரன் விளாசி அசத்தினார். யஸ்டிகா, ஹேலி, அமெலியா கணிசமாக ரன் குவித்ததும் பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னில் வெளியேறினாலும், அவர் நல்ல பார்மில் இருப்பதை மறுக்க முடியாது. பந்துவீச்சில் ஹாட்ரிக் சாதனையுடன் 4 விக்கெட் கைப்பற்றிய இஸ்ஸி வாங், சைகா இஷாக், ஸைவர் பிரன்ட், ஹேலி மேத்யூஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் மும்பை அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் லான்னிங், தானியா பாட்டியா, கேப்ஸி, ஜோனஸன், மரிஸேன், டாரா நோரிஸ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், ஜெமிமா, ராதா என திறமையான வீராங்கனைகள் அணிவகுக்கின்றனர். இரு அணிகளுமே முதல் சாம்பியனாகி கோப்பையை முத்தமிட துடிப்பதால், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அனல் பறப்பது உறுதி. * மும்பை இந்தியன்ஸ் (மகளிர்): ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), பிரியங்கா பாலா, யஸ்டிகா பாட்டியா, நீலம் பிஷ்ட், ஹீதர் கிரகாம், தாரா குஜ்ஜார், சைகா இஷாக், ஜின்டிமணி கலிதா, அமன்ஜோத் கவுர், ஹுமைரா காஸி, அமெலியா கெர், ஹேலி மேத்யூஸ், நதாலியே ஸைவர் பிரன்ட், க்ளோ டிரையன், பூஜா வஸ்த்ராகர், இஸ்ஸி வாங், சோனம் யாதவ். டெல்லி கேப்பிடல்ஸ்: மெக் லான்னிங் (கேப்டன்), தானியா பாட்டியா, ஆலிஸ் கேப்ஸி, லாரா ஹாரிஸ், ஜெசியா அக்தர், ஜெஸ் ஜோனஸன், மரிஸேன் கப், மின்னு மணி, அபர்னா மொண்டால், டாரா நோரிஸ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், டைடஸ் சாது, ஷபாலி வர்மா, ஸ்நேகா தீப்தி, ராதா யாதவ்.

மூலக்கதை