மரியா சாக்கரியை வீழ்த்தினார் பியான்கா

தினகரன்  தினகரன்
மரியா சாக்கரியை வீழ்த்தினார் பியான்கா

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்கு தகுதி பெற்றார். 2வது சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (27 வயது, 10வது ரேங்க்) மோதிய பியான்கா (22 வயது, 31வது ரேங்க்) 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச் (26 வயது, 9வது ரேங்க்) அதிரடியாக விளையாடிய 6-1, 6-1 என்ற நேர் செட்களில் கனடாவின் லெய்லா பெர்னாண்டசை (20 வயது, 53வது ரேங்க்) மிக எளிதாக வீழ்த்தினார்.முன்னணி வீராங்கனைகள் கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), வெரோனிகா குதெர்மதோவா (ரஷ்யா) ஆகியோர் தங்களின் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர். அரினா சபலென்கா (பெலாரஸ்), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, கரோலினா முச்சோவா, மேரி பவுஸ்கோவா, பார்போரா கிரெஜ்சிகோவா, பெத்ரா குவித்தோவா, மார்கெடா வோண்டுருசோவா, அமெரிக்க வீராங்கனைகள் சோபியா கெனின், மேடிசன் கீஸ், சொரானா சிர்ஸ்டியா (ருமேனியா) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மூலக்கதை