உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்

தினகரன்  தினகரன்
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்

சுவிஸ்: உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் முதல் 100 முக்கிய நகரங்களில் 65 இந்திய நகரங்களின் மாசு மிகவும் மோசமாக உள்ளதாக சுவிஸ் ஆய்வு நிறுவனம் ெதரிவித்துள்ளது. உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ‘ஐக்யூ ஏர்’ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை சுவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் 131 நாடுகளில் (7,300 நகரங்கள்) இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், முதல் 100 மாசுபட்ட நகரங்களில் 65 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில், முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலம் பிவாடி உள்ளது. இந்த நகரம் ஒட்டுமொத்தமாக மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் (பங்களாதேஷ், இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள்,  நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான்,  உஸ்பெகிஸ்தான்) மாசுபட்ட நகரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை காட்டிலும் சுமார் 18.5 மடங்கு மாசுத் துகள்கள் உள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. தொடர்ந்து பீகார் மாநிலம் தர்பங்கா, அசோபூர், பாட்னா, சாப்ரா ஆகிய நகரங்களும், உத்தரபிரதேசத்தில் காசியாபாத், முசாபர்நகர், கிரேட்டர் நொய்டா நகரமும், அரியானாவில் தருஹோரா நகரமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மத்திய மற்றும் தெற்காசியாவில் மிகவும் மாசுபட்ட 15 நகரங்களில் 12 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை